விஷ ஊசி விவகாரம் : யாழ்.போதனா வைத்தியசாலையில் பரிசோதனை
புனர்வாழ்வின்போது முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டதாக பாரிய சர்ச்சைகள் நிலவி வருகின்ற நிலையில், அவர்களுக்கு முதற்கட்ட உடற்பரிசோதனை நடத்துவது தொடர்பில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வட மாகாண சபையால் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்விடயம் தொடர்பில் அண்மையில் யாழ்.போதனா வைத்தியசாலையின் வைத்திய கலாநிதி சிவன் சுதன் தலைமையிலான ஐவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டது. குறித்த குழுவில் தமது பெயர் விபரங்களை பதிவுசெய்த முதல் 5 போராளிகளுக்கே உடற்பரிசோதனை மேற்கொள்ளுமாறு வட மாகாண சபை அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிது.
புனர்வாழ்வின்போது முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டதாகவும் முன்னாள் போராளிகளின் திடீர் சுகயீனம் மற்றும் மரணத்திற்கு இதுவே காரணம் எனவும் பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், முதற்கட்ட நடவடிக்கையாக பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் விபரங்களை திரட்டும் செயற்பாட்டில் வட மாகாண சபை ஈடுபட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் சர்வதேச ரீதியில் ஆய்வுசெய்யப்பட்டு விசாரணை நடத்தவேண்டுமென தமிழ் மக்கள் பிரதிநிதிகள் வலியுறுத்தி வந்தாலும், இலங்கையில் போதிய மருத்துவ வசதிகள் காணப்படுவதாகவும் சர்வதேசத்தின் உதவி தேவையா இல்லையா என அரசாங்கமே தீர்மானிக்கும் என்றும் அண்மையில் அமைச்சர் ராஜித தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.