அவசரப்பட வேண்டாம் : அரசாங்கம்
பாதிக்கப்பட்ட மக்களுக்காகவே காணாமால் போனோர் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பதிக்கப்பட்ட மக்கள் நிராகரிக்கப்படுவது என்ற குற்றச்சாட்டை ஒருபோதும் ஏற்றுகொள்ள முடியாது. இது தொடர்பான பொறிமுறைகள் சரியான பலமடையும் வரையில் எவரும் அவசரப்பட வேண்டாம். இந்த ஆட்சியில் உண்மைகள் கண்டறியப்படும் என்று அரசாங்கம் குறிப்பிட்டது.
காணாமால் போனோர் அலுவலக சட்டமூல உருவாக்கத்தில் மக்களின் கருத்துக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக நல்லிணக்க செயலணி தனது அறிக்கையில் குற்றம் சுமத்தியுள்ளது. இது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வினவியபோதே அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்.
நாம் உண்மைகளை கண்டறியும் பொறிமுறைகளை பலமாக முன்னெடுத்து வருகின்றோம். மனித உரிமைகளை பலப்படுத்துவது மிகமுக்கியமான காரணியாகும். அதேபோல் இதில் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்தையும் தாண்டி காணாமல் போனோர் தொடர்பில் ஆராயும் ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. காணாமல்போனோர் தொடர்பில் ஆராயும் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் செயற்பாடுகள் இன்னும் பூரணப்படுத்தப்படவில்லை.
இந்த அமைப்பு எவ்வாறு செயற்படும், அதன் வரைபுகள் மற்றும் அங்கத்தவர்கள் தொடர்பில் இன்னும் இறுதித் தீர்மானம் ஒன்று எடுக்கப்படவில்லை. அவ்வாறு இருக்கையில் இதன் செயற்பாடுகள் தொடர்பிலான விமர்சனங்களை எம்மால் ஏற்றுகொள்ள முடியாது.