Breaking News

சு.கவின் பழைய அமைப்பாளர்களில் பலருக்கு ஆப்பு



ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் பலர் நீக்கப்பட்டு, புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், மிஞ்சியிருக்கின்ற சு.கவின் அமைப்பாளர் பதவிகளில் இவ்வாரத்துக்குள் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவிருப்பதாக, நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது. 

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் 44 பேர் கடந்த 17ஆம் திகதியன்று உடன் அமுலுக்குவரும் வகையில் நீக்கப்பட்டு புதியவர்கள் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில், ஒன்றிணைந்த எதிரணியில் இருக்கின்ற, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பந்துலகுணவர்தன மற்றும் டலஸ் அழகபெரும ஆகிய இருவரும் தங்களுடைய பதவிகளை இராஜினாமாச் செய்திருந்தனர். அவ்விருவருக்கும் பதிலீடாக புதுமுகங்கள் இரண்டு நியமிக்கப்பட்டன.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் என்றவகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சாட்டையைக் கையிலெடுத்துள்ள நிலையில், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் இருக்கின்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியைச் சேர்ந்த அமைப்பாளர்கள் சகலரும் தங்களுடை பதவிகளை தூக்கியெறிவதற்கு தயாராக இருப்பதாக அறியமுடிகின்றது. அவ்வாறு பதவிவகிப்பவர்கள் பலரும், எதிர்வரும் சில நாட்களுக்குள், மாவட்ட மற்றும் தேர்தல் அமைப்பாளர்கள் பதவியிலிருந்து விலகப்போவதாக அறிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தங்களுடைய இராஜினாமாக் கடிதங்களை, கட்சியின் செயலாளருக்கு, ஒரேடியாக அல்லாமல், கொஞ்சம் கொஞ்சமாக அனுப்பி வைப்பதற்கும் அவர்கள் தீர்மானித்துள்ளதாக அறியமுடிகின்றது. ‘ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் இருக்கின்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களான மஹிந்தானந்த அளுத்கமகே, குமார வெல்கம, டொக்டர் ரமேஷ் பத்திரண, மொஹான் டி சில்வா, லொஹான் ரத்துவத்தே, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, விதுர விக்கிரமநாயக்க, ரஞ்சித் டி சொய்சா மற்றும் ஜனக வக்கும்புர ஆகியோர் தங்களது தேர்தல் மற்றும் மாவட்ட அமைப்பாளர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்யவுள்ளனர்’ என்று அவர் கூறினார். ‘இதேவேளை, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் உறுப்பினர்களை சுதந்திர எம்.பி.க்களாக அங்கிகரிக்குமாறு கோரி, சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு, 51 இணைந்த எதிரணியினர் கைச்சாத்திடப்பட்ட கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டது.’ என்றும் அறியமுடிகின்றது.