மகிந்தவின் சாயம் வெளுத்தால் அது தமிழருக்கு நன்மை என்ற பயமோ?
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச புதிய கட்சியை ஆரம்பித்தால் அவர் தொடர்பிலான பல இரகசியங்களை வெளிப்படுத்துவேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
மகிந்த ராஜபக்ச குறித்த இரகசியங்களை வெளியிட்டால் அவரின் சாயம் வெளுக்கும் என்றும் ஜனாதிபதி மைத்திபால சிறிசேன எச்சரித்திருப்பதுதான் இங்கு நோக்குதற்குரியது.
அதாவது முன்னாள் ஜனாதிபதி தொடர்பில் பல இரகசியங்கள் ஜனாதிபதி மைத்திரிக்குத் தெரிந்துள்ளது. இருந்தும் அவர் அதனை வெளியிடாமல் மறைப்புச் செய்து வருகிறார் என்பது அவரின் வாயிலிருந்தே வெளிப்ப ட்டுள்ளது.
உண்மையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தொடர்பிலான இரகசியங்களை ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் மைத்திரிபால சிறிசேன வெளியிட்டிருக்க வேண்டும். எனினும் அதனை அவர் செய்யவில்லை.
சிலவேளை மகிந்த ராஜபக்சவின் இரகசியங்களை தேர்தல் காலத்தில் வெளியிட்டால் அது தனக்குப் பேராபத்தைத் தரும் என்ற அடிப்படையில் அந்த நேரத்தில் இரகசியங்களைச் சொல்லாமல் விட்டிருக்கலாம். இருந்தும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற கையோடாவது மகிந்த ராஜபக்ச தொடர்பான இரகசியங்களை வெளியிட்டிருக்க வேண்டும். இதனையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செய்யவில்லை.
சரி அதனையும் செய்யவில்லை என்றால்; ஜனாதிபதி மைத்திரியின் அரசுக்கு எதிராக பல்வேறு இடை ஞ்சல்களை மகிந்த ராஜபக்ச தரப்புச் செய்த போதாவது இரகசியங்களை வெளியிட்டிருக்கவேண்டும். இதனையும் ஜனாதிபதி மைத்திரி செய்யவில்லை.
மாறாக இப்போது, புதிய அரசியல் கட்சியொன்றை ஆரம்பிக்கப் போவதாக மகிந்த ராஜபக்ச அறிவித்த தன் பின்னர் அதைத் தடுக்கும் நோக்கில்,
“புதிய அரசியல் கட்சியை மகிந்த ஆரம்பித்தால் அவர் தொடர்பான இரகசியங்களை வெளியிட்டு அவரின் சாயத்தை வெளுக்கச் செய்வேன்” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியதானது; மகிந்த ராஜபக்ச குறித்து ஜனாதிபதி மைத்திரிக்கு தெரிந்த இரகசியங்கள் தமிழினத்துக்கு எதிராக நடந்த யுத்தம் மற்றும் காணாமல்போனவர்கள் தொடர்பு பட்டதாக இருக்கலாம் என்று ஊகிக்கத் தோன்றுகிறது.
ஏனெனில் முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக் தொடர்பான இரகசியங்களை வெளியில் சொல்வதா னது தமிழ் மக்களுக்கு சாதகமாகி விடும் என்ற நினை ப்பிலேயே ஜனாதிபதி மைத்திரிபால அதனை இன்னமும் மறைப்புச் செய்து வருகிறார் என்று நினைப்பதில் தவறில்லை.
தனது அரசியல் இலாபத்திற்காக மகிந்த ராஜபக்சவின் சாயத்தை வெளுக்கச் செய்தால் அவர் மின்சார நாற்காலியில் அமருகின்ற ஆபத்தும் ஏற்படலாம் என்ற அச்சமே இதுவரைக்கும் அந்த இரகசியங்கள் பக்குவமாக வைக்கப்பட்டுள்ளன என்று கூறுவதில் பிழை இருப்பதாகத் தெரியவில்லை.
ஏனெனில் ஜனாதிபதி மைத்திரிக்கு, மகிந்த ராஜபக்ச மீதான கோபம் என்பது அரசியல் ரீதியானது மட்டுமே. அதனால்தான் ஜெனிவாவில் வைத்து கோத்தபாய ராஜபக்சவை மைத்திரி தரப்பு காப்பாற்றியது.
இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரி கூறிய இரகசியங்கள் அவருக்கு மட்டுமே தெரிந்ததாகவே தொடர்ந்தும் இருக்கும் என்பதில் ஐயமில்லை.