Breaking News

நெருப்பாற்றை நீந்திக் கடந்த தரம் ஐந்து மாணவச் செல்வங்களே!

இலங்கைத் திருநாட்டில் தரம் ஐந்தில் கல்வி கற்கும் மாணவச் செல்வங்களே! நேற்றைய தினம் உங்களின் நெருப்பாற்றை நீந்தும் பணி முடிவுக்கு வந்துள்ளது. 


இது உங்களுக்கு பெரும் மன ஆறுதலையும் நிம்மதியையும் தந்திருக்கும் என நம்பலாம். 

அறிஞர்கள் ஒன்று சேர்ந்து எங்கள் பச்சிளம் பாலகர்களின் உள்ளக் கமலங்களை எவ்வாறு கசக்கிப் பிழிந்து போடலாம் என ஒன்று கூடி ஆராய்ந்து எடுத்த முடிவுதான் தற்போது நடைபெற்று வரும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையாகும். 

ஒரு காலத்தில் ஏழை மாணவர்களின் கல்விக்கு நிதியுதவி செய்யும் நோக்குடன் கொண்டு வரப்பட்ட ஐந்தாம் தரப்புலமைப் பரிசில் பரீட்சையானது, இப்போது பிரபல்யமான பாடசாலைகளின் அனுமதிக்கான பரீட்சையாக மாறிப்போக,

இலங்கை முழுவதிலும் ஐந்தாம் தரம் என்ற தும் பெற்றோர்களும் பிள்ளைகளும் அந்தத் தரத்தில் கற்பிக்கும் ஆசிரியர்களும் அதிபர்களும் கடும் தவம் இருந்து, 

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையாவிட்டால் இந்த உலகமே இருண்டு விடும். ஆகையால் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையச் செய் இறைவா என்று இறைஞ்சுகின்றனர்.

இது ஒருபுறம் நடந்தேற,  மாலை முழுவதும் விளையாடி மகிழ்வோடு குதூகலமாக இருக்க வேண்டிய  பத்துவயசுப் பிஞ்சுகள் படிப்பு... படிப்பு என தங்களை புத்தகங்களுக்குள் புதைத்துக் கொண்டு இந்த உலகத்தில் ஏன்தான் வந்து பிறந்தோம் என்று  ஏங்குகின்றனர். 

நேற்று நடந்த பரீட்சை பிள்ளைகளின் மன அழுத்தத்திற்கு விடுதலை தந்தாலும் இன்னும் ஒரு மாதத்தில் வெளிவரும் பரீட்சை முடிவுகள் செய்யப்போகும் திருவிளையாடல்களை நினைக்கும் போதே நெஞ்சம் பதறுகிறது. 

அப்பா படத்தில் வரும் சிங்கப்பெருமான்கள், சித்தியடைந்த மாணவர்களை உரிமை கோரும் பாடசாலைகள்; தனியார் கல்வி நிறுவனங்கள்; பாராட்டுப் பத்திரங்கள் வெளியிடும் உறவுகள்; கட்டவுட்டுக்களை நிறுத்தும் பிரபலமான பாடசாலைகள் என தேர்தல் திருவிழாக்கள் நடந்தேறும். 

இதனிடையே ஒரு புள்ளியால் சித்தியைப் பறிகொடுத்த பிஞ்சுகள்; சித்தியடைய முடியாமல் போன மாணவச் செல்வங்கள் படும் சித்திரவதைகள் எங்கள் நாட்டின் நாலாம் மாடி பரவாயில்லையே என்று சொல்ல வைக்கும்; இதற்கு மேலாக சேமிப்புப் புத்தகத்தில் பதிவுப் பணம் வைக்கும் வங்கிகள். பாடசாலை மட்டம், கோட்டமட்டம், வலய மட்டம், மாகாண மட்டம், தேசியமட்டம் என்றவாறு நடைபெறும் பாராட்டு விழாக்கள் அனைத்தும் தோற்றுப்போன மாணவர்களை எழவிடாமல் தடுக்கும் மரக்குற்றிகளாக பாரம் ஏற்றப் போவதை எங்ஙனம் ஜீரணிக்கப்போகிறோம். 

என்ன செய்வது? எங்களை நாங்களே வதைப்பது என்று முடிவு செய்த பின்பு யார் யாரைத் தடுக்க முடியும்? 

ஆக, தரம் ஐந்து புலமைப்பரீட்சை ஒரு நெருப்பாறாக பத்து வயசு பிஞ்சுகளை வதைக்கவே போகிறது. இதிலிருந்து மீள்வதென்பது முடியாத காரியமாயிற்று. நடப்பதைக் காண்போம் என்று பெருமூச்சுவிடுவதைத் தவிர வேறு வழி எதுவுமே தெரியவில்லை.