ஜனாதிபதி இராஜினாமா செய்ய வேண்டும்- கம்மம்பில கோரிக்கை
நான் மைத்திரிபால சிறிசேனவாக இருந்திருந்தால், நாட்டின் கௌரவத்தைப் பாதுகாப்பதற்காக ஜனாதிபதிப் பதவியிலிருந்து இராஜினாமா செய்திருப்பேன். அவர் அவ்வாறு செய்யாதிருப்பது நாட்டிற்கு ஏற்பட்டுள்ள ஒரு துரதிஷ்டமாகும் என தூய ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மம்பில தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக அவுஸ்திரேலிய ஊடக நிறுவனமொன்று கடந்த சில தினங்களுக்கு முன்னர் முன்வைத்திருந்த குற்றச்சாட்டு தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
மெகா டீல் மேற்கொண்டதாக தனக்கு எதிராக குற்றம் சாட்டிய மெகா பொய் கூறியவர்களுக்கே இன்று அதற்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்பட்டுள்ளது. தனக்கு எதிராக பொய்யை இட்டுக் கட்ட முயற்சித்த அதே நாட்டிலிருந்து ஜனாதிபதிக்கு எதிராக குண்டு வெடிக்க ஆரம்பித்துள்ளது.
தம்முடைய கௌரவத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காக ஜனாதிபதிப் பதவியிலிருந்து இராஜினாமா செய்யுமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி மைத்திரிபால விவசாய அமைச்சராக இருந்த காலத்தில், 2009 ஆம் ஆண்டு அணைக்கட்டு ஒன்றை நிர்மாணிக்கும் பணிகளை அவுஸ்திரேலிய நிறுவனமொன்றுக்கு வழங்குவதற்கு, குறித்த நிறுவனத்திடம் லஞ்சம் கோரியதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் அவுஸ்திரேலிய பெடரல் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக “சிட்னி மோர்னிங் ஹெரல்ட்” எனும் பெயரில் வெளிவரும் அவுஸ்திரேலிய பத்திரிகையொன்று அறிவித்திருந்தது.
இந்த செய்தி தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சட்ட மா அதிபருக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது