நல்லாட்சியில் தமிழர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை- மனோ கணேசன்
நல்லாட்சி அரசாங்கத்தில் சிறுபான்மை மக்களுக்கான அனைத்து உரிமைகளும் கிடைத்து விட்டதாக கூறமுடியாது என தேசிய கலந்துரையாடல்கள் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.
எல்லா உரிமைகளும் கிடைத்து விட்டதாக கூறுவதற்கு தாம் பொய்யனும் அல்ல ஏமாற்று பேர்வளியும் அல்ல என அவர் குறிப்பிட்டார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்;து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
அத்துடன் நல்லாட்சியை உருவாக்குவதற்காக பாரிய இழப்புக்களை சந்தித்துள்ளதாக தெரிவித்த அவர் நல்லாட்சியின் மூலம் நாட்டில் அமைதி, மகிழ்ச்சி நிலவி வருவதாகவும் இனவாதம் மதவாதம் மற்றும் அரச பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
எனினும் நல்லாட்சி ஊடாக தமிழ் மக்களுக்கு அனைத்து நன்மைகளும் கிடைக்கப்பெறவில்லையெனவும் அதனை பெற்றுக்கொள்ள எதிர்நீச்சலுடன் பயணிப்பதாகவும் தேசிய கலந்துரையாடல்கள் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.
அத்துடன் நாடாளுமன்ற தேர்தல் காலத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியை தனித்து போட்டியிடுமாறு சில தரப்பினர் பணம் கொடுத்து பேரம் பேசியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது, ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரம சிங்கவை தோற்கடிப்பதற்காக, பேரம் பேசப்பட்டதோ அதே போன்று தமிழ் முற்போக்கு கூட்டணியிடமும் பேரம் பேசப்பட்டதாக அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டார்.