Breaking News

நம்பிக்கையோடு இருங்கள்... நம்பிக்கையோடு இருங்கள்...!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த தலைவர் யார்? என்ற பிரச்சினைதான் கூட்டமைப்புக்கிடையே பக்கச்சார்பை ஏற்படுத்தியுள்ளது. 

வடக்கு மாகாண அரசின் இயங்குநிலை இன்று வரை சரிப்பட்டு வரவில்லை. அமைச்சர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விட்டவர்கள் இப்போது அதற்கு முதலமைச்சர் இணக்கம் தெரிவித்தவுடன் வேண்டாம் என்று கூறும் அளவுக்கு வந்து விட்டனர். 

வடக்கு மாகாண அரசு அமைந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், முதலமைச்சர் விசாரிப்பதா? அல்லது ஓய்வுபெற்ற நீதிபதிகள் விசாரிப்பதா என்று வாதம் நடத்தும் அளவிலேயே வடக்கு மாகாண சபையின் நிலைமை உள்ளது. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளராக தேர்தலில் போட்டியிட்டு தமிழ் மக்களின் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற முதலமைச்சருக்கு எதிராக வடக்கு மாகாணத்தின் ஆளும்தரப்பின் உறுப்பினர்கள் சிலர் விடுதிகளில் கூடி கையயழுத்திட்டு கடிதங்கள் அனுப்பிய நாடகங்கள்தான் எத்தனை!

இவை எல்லாம் நடப்பதற்குக் காரணம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தருக்குப் பின் யார் கட்சித் தலைவர் என்ற போட்டியால் உறுப்பினர்கள் கன்னை பிரிந்து கொண்டது தான். இருந்தும் எங்கள் சம்பந்தப்பெருமானுக்கு இவை எதுவுமே தெரியாது. 

அவர் இன்றுவரை நம்பிக்கையோடு இருங்கள்... நம்பிக்கையோடு இருங்கள்... என தன் சுட்டு விரலைக்காட்டி-உறுக்கிச் சொல்கிறார். சுட்டுவிரலால் தன் கட்சிக்காரர்களை உறுக்கி அடக்கிய பழக்கம் தமிழ் மக்களைச் சந்திக்கும் போதும் அவருக்கு ஏற்படுகின்றது. 

இவ்வாறு சுட்டுவிரலைக்காட்டி அதட்டும் குரலில் நம்பிக்கையோடு இருங்கள். இந்த அரசை நாம் நம்புகிறோம் என்று சம்பந்தர் கூறும்போது அதைக் கேட்பவர்கள் தமக்குள்,

ஐயா! நீங்கள்தான் நம்பிக்கையோடு இருங்கள்! உங்கள் நம்பிக்கை, உங்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் மீது; உங்களுக்குத் தரப்படும் மாத்திரைகள் மீது; உங்களைப் பராமரிப்பவர்கள் மீது இருக்கட்டும். 

அடுத்த பொதுத் தேர்தல் பற்றி இன்று வரை நீங்கள் சிந்திக்கவில்லை என்பதை உங்களின் உரைகளில் இருந்து உணரமுடிகின்றது. அதற்குக்காரணம் அடுத்த தேர்தலுக்கு உங்கள் உடல்நிலை சந்தர்ப்பம் தராது என்பதுதான்.  உங்கள் நிலைமையே ஈடாட்டமாக இருக்கும் போது நம்பிக்கையோடு இருங்கள்... நம்பிக்கையோடு இருங்கள்... என்று நீங்கள் கூறுவதன் பொருள்தான் என்ன? என்பதுதான் புரியவில்லை.

நம்பிக்கை தருகின்ற உங்களின் உடல்நிலை தளர்ந்துபோனால் யாரிடம் போய் நாம் கேட்பது? ஆகையால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்கள் தமிழ் மக்களை நம்பிக்கையோடு இருங்கள் என்று சொல்வதை விடுத்து வடக்கு கிழக்கு இணைந்த சமஷ்டியை தமிழ் மக்களிடம் கொடுங்கள். அவர்கள் உங்களுக்கு நிச்சயம் உதவுவார்கள். இதை நம்புங்கள் என்று அரசுக்குக் கூறி அரசை விரைவுபடுத்துவது தான் பொருத்துடையதாகும்