Breaking News

பரவிப்பாஞ்சான் மக்களுடைய காணிகள் விடுவிக்கப்படும்:சுவாமிநாதன் உறுதி



இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொண்ட கிளிநொச்சி – பரவிப்பாஞ்சான் மக்களை புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் இன்று சந்தித்துள்ளார். 

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் வைத்து இன்று காலை மக்களை சந்தித்த, அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், இராணுவத்தினரிடமுள்ள காணிகளை விடுவிப்பதற்கு இரண்டு வாரமோ அல்லது ஒரு மாதம் கூட ஆகலாம் என்றும், எனினும் உரிய தரப்பினருடன் இது சம்பந்தமாக கலந்துரையாடி, உரிய தீர்வைப் பெற்றுத் தருவதாகவும் உறுதியளித்துள்ளார். 

கடந்த ஐந்து நாட்களாக பரவிப்பாஞ்சான் மக்கள் மேற்கொண்ட தொடர் கவனயீர்ப்பு போராட்டம் நேற்று புதன்கிழமை தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ள நிலையிலேயே அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் இன்று போராட்டம் மேற்கொண்ட மக்களை சந்தித்துள்ளார். 

கிளிநொச்சி – பரவிப்பாஞ்சானிலுள்ள 35 குடும்பங்களுக்கு சொந்தமான 13 ஏக்கர் காணி, 2 வாரங்களுக்குள் விடுவிக்கப்படும் என பாதுகாப்பு செயலாளர் தனக்கு வாக்குறுதி அளித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் உறுதியளித்ததை தொடர்ந்து நேற்று பரவிப்பாஞ்சான் மக்களின் போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது.

கிளிநொச்சி – பரவிப்பாஞ்சான் பகுதியில் இராணுவத்தினர் வசமிருக்கும் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி காணி உரிமையாளர்கள் கடந்த ஐந்து நாட்களாக இரவு பகலாக தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் உறுதியளித்த நிலையில், மீள்குடியேற்ற அமைச்சர் இன்று அப்பகுதிக்கு விஜயம் செய்து பொதுமக்களை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். 

எனினும் எதிர்க்கட்சி தலைவர் இரண்டு வாரங்களுக்குள் காணி விடுவிப்பு தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிட்ட நிலையில், அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் இரண்டு வாரமோ, ஒரு மாதமோ ஆகலாம் என கூறியுள்ளமை முரணான கருத்துக்களான உள்ளன. 

கிளிநொச்சி மாவவட்டத்தில் அமைக்கப்பட்டுவரும் பௌத்த விகாரைகள் தொடர்பில் தான் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்க மாட்டேன் என்றும் டி.ம். சுவாமிநாதன் குறிப்பிட்டுள்ளார்.