Breaking News

சட்டசபையில் இருந்து ஸ்டாலினை குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினர்

நமக்கு நாமே பயணம் குறித்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வெளியிட்ட விமர்சனத்தை அவைக்குறிப்பில் இருந்து நீக்க மறுத்த சபாநாயகருக்கு எதிராக தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூச்சல் எழுப்பி, அமளியில் ஈடுபட்டதால் அவர்கள் அனைவரையும் சட்டசபையில் இருந்து வெளியேற்றுமாறு சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். 

சட்டசபையில் இன்று திருப்பூர் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. குணசேகரன் (அ.தி.மு.க.) பேசும்போது, ஸ்டாலினின் “நமக்கு நாமே” பயணம் பற்றி பேசினார். 

அவர் கூறுகையில், “நமக்கு நாமே” பயணம் என்று கூக்குரல் போட்டவர்கள் கோட்டையைப் பிடிக்க முடியவில்லை என்றார். இதற்கு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

அப்போது தி.மு.க. துணை தலைவர் துரைமுருகன் எழுந்து, “அ.தி.மு.க. எம்.எல்.ஏ. நமக்கு நாமே பயணம் பற்றி பேசியதை சபை குறிப்பில் இருந்து நீக்க கோரிக்கை விடுத்தார். தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இதை வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர். 

சபாநாயகர் அதை ஏற்க மறுத்து விட்டார். யார் பெயரையும் குறிப்பிட்டு அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பேசாததால் அவர் பேசியதை நீக்க வேண்டியதில்லை என்றார். 

இதனால் தி.மு.க.வினர் மேலும் ஆவேசம் அடைந்தனர். துரைமுருகன் கூறுகையில், “நமக்கு நாமே” என்ற ஒரு திட்டத்தை முன் வைத்து தமிழ்நாடு முழுவதும் சுற்றி வந்தவர் எங்கள் தலைவர். எனவே அவர் பெயரை குறிப்பிடாமல் பேசினாலும் அது அவரைத்தான் குறிக்கும். 

எனவே அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பேசியதை அனுமதித்தால், தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் இது போல பேசுவார்கள். சின்ன, சின்ன வி‌ஷயங்களுக்கு எல்லாம் இப்படி நடந்து கொண்டால் சபையின் நேரம்தான் வீணாகும் என்றார்.

சபாநாயகர்:- யார் பெயரையும் குறிப்பிட்டு ஒருமையில் சொல்லி இருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுத்திருப்பேன். ஆனால் அவர் அப்படி பேசவில்லை. 

(இவ்வாறு விவாதம் காரசாரமாக நடந்தபோது சட்டசபைக்குள் மு.க.ஸ்டாலின் வேகமாக வந்தார்) 

மு.க.ஸ்டாலின்:- நமக்கு நாமே திட்டம் பற்றி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பேசியதற்கு உள்ளபடியே நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஏன் என்றால் இந்த பயணம் தமிழ்நாடு முழுவதும் எந்த அளவுக்கு பிரபலம் அடைந்தது என்பது அனைவருக்கும் தெரியும். 

(இவ்வாறு கூறி விட்டு முன்பு முதலமைச்சர் இதுபற்றி பேசியது பற்றியும் ஸ்டாலின் உதாரணத்துக்கு குறிப்பிட்டார்) 

சபாநாயகர்:- முதலமைச்சர் பற்றி மு.க. ஸ்டாலின் பேசியது சபை குறிப்பில் இருந்து நீக்கப்படுகிறது. முதலமைச்சர் அவ்வாறு பேசவில்லை. 

ஓபன்னீர்செல்வம்:- தேவை இல்லாமல் அ.தி.மு.க. பொதுக்குழு பற்றி எதிர்க்கட்சித் தலைவர் பேசி உள்ளார். அ.தி.மு.க. பொதுக்குழுவில் பேசியது எதுவும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. 

சபாநாயகர் :- எதிர்க்கட்சி தலைவர் முதல்-அமைச்சர் பற்றி பேசியதை இங்கு பதிவு செய்ய முடியாது. 

உடனே தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எழுந்து சபாநாயகருக்கு எதிராக உரக்க கோ‌ஷம் போட்டனர். ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட அனைவரும் எழுந்து நின்று சபாநாயகர் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பேச வாய்ப்பு கேட்டனர். 

ஆனால் சபாநாயகர் யாருக்கும் பேச வாய்ப்பு தர முடியாது என்றார். இதையடுத்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இருக்கைகளில் உட்காராமல் நின்று கொண்டே கோ‌ஷமிட்டனர். 

இதனால் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் வெளியேற்ற சபை காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். உடனே மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் அவரவர் இருக்கையில் அமர்ந்து கொண்டனர். 

ஆனாலும் சபை காவலர்கள் நான்கு புற வாசல் வழியாக சபைக்குள் திபு.. திபு...வென வந்தனர். முதலில் மு.க.ஸ்டாலினை குண்டுகட்டாக தூக்கினார்கள். 

இதை கண்டு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கடும் ஆவேசம் அடைந்தனர். அப்போது யாரோ ஒருவர் தண்ணீர் பாட்டிலை தூக்கி சபை காவலர்கள் மீது வீசினார். 

காவலர்களின் தொப்பியையும் பறித்து வீசினார்கள். இதனால் சபை முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. 

என்றாலும் சபை காவலர்கள் மு.க.ஸ்டாலினை குண்டுகட்டாக தூக்கி சபைக்கு வெளியில் கொண்டு வந்தனர். பிறகு தரையில் ஸ்டாலினை உட்கார வைத்தனர். 

அதன் பிறகு துரைமுருகனையும் குண்டுகட்டாக தூக்கி வந்து ஸ்டாலின் அருகே இறக்கி வைத்தனர். இப்படி தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஒவ்வொருவரையும் வெளியேற்றினார்கள். 

இதனால் சபை முழுவதும் பரபரப்பு நிலவியது. 

அவைக்காவலர்கள் வெளியேற்ற தொடங்கியதும் அவையில் இருந்த தி.மு.க உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக கோ‌ஷமிட்டனர். சில உறுப்பினர்கள் வெளியேற மறுத்தனர். அவர்களை வெளியேற்ற அவைக் காவலர்கள் முயற்சி செய்தனர். 

அப்போது துணைத்தலைவர் துரைமுருகன் நெஞ்சை பிடித்தபடி இருக்கையில் சரிந்து உட்கார்ந்தார். அவருக்கு தண்ணீர் கொடுத்தனர். இருக்கையில் சிறிது நேரம் சாய்ந்து படுத்து இருந்தார். 

உள்ளே இருந்த தி.மு.க.வினர் தொடர்ந்து அரசுக்கு எதிராகவும், சபாநாயகருக்கு எதிராகவும் கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். 

அதைத்தொடர்ந்து ஒவ்வொரு உறுப்பினரையும், காவலர்கள் குண்டுகட்டாக தூக்கிச் சென்று அவையில் இருந்து வெளியேற்றினார்கள். 

வெளியே வந்த தி.மு.க உறுப்பினர்கள் ‘காப்பாற்று... காப்பாற்று ...ஜனநாயகத்தை காப்பாற்று’ என்று அரசுக்கு எதிராக கோ‌ஷமிட்டனர். 

அதன்பிறகு அவை முன்னவர் ஓ. பன்னீர் செல்வம் தி.மு.க. உறுப்பினர்களை ஒருவாரம் சஸ்பெண்டு செய்வதற்கான தீர்மானத்தை கொண்டு வந்தார். அது நிறைவேற்றப்பட்டது. 

இதையடுத்து தி.மு.க உறுப்பினர்களை ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்வதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார். தி.மு.க உறுப்பினர்களின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தார். 

இதையடுத்து இன்று சபை நடவடிக்கைகள் முடிவடைவதாகவும், சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் விவாதத்துக்கு நாளை பதில் அளிப்பார்கள் என்றும் அறிவித்தார்.