Breaking News

அனந்தி, சிவகரன் பதவி இறக்கம்! – தமிழரசுக் கட்சி தீர்மானம்


கடந்த ஜனாதிபதி தேர்தலில், தமிழரசுக் கட்சியின் தீர்மானத்துக்கு அமைவாக நடக்கவில்லையென எங்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பில் இருவரும் ஒன்றுபட்டு தீர்மானம் எடுப்போம்’ என மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

கட்சியின் தீர்மானத்துக்கமைய செயற்படவில்லையென மகளிர் அணித் தலைவி அனந்தி சசிதரன் மற்றும் இளைஞர் அணிச் செயலாளர் வி.சிவகரன் ஆகியோர், கட்சியின் மத்திய குழுவால் பதவி இறக்கம் செய்யப்பட்டு, தொடர்ந்து 3 வருடங்களுக்கு சாதாரண உறுப்பினர் வரிசையில் வைக்கப்பட்டு, கண்காணிக்கப்பட உள்ளனர். இந்த தீர்மானம், வவுனியாவில் நடைபெற்ற மத்திய குழுத் தீர்மானத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அனந்தியிடம் ஊடகம் ஒன்று தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது குறித்து, தொடர்ந்து கருத்துரைத்த அவர், ‘எங்கள் மீது ஒழுக்காற்று விசாரணை மற்றும் நடவடிக்கை எடுப்பதாக, கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் தீர்மானித்து, இழுபறிப்பட்டு தற்போது தான் முடிவை எடுத்துள்ளனர். எங்கள் மீது விசாரணை நடத்தும் போது, அனைத்துக்கும் எழுத்து மூலமான பதிலை நாங்கள் வழங்கியிருந்தோம். இதனால், இந்த தீர்மானம் தொடர்பில் சஞ்சலப்படத் தேவையில்லை. ஆனால், இன்னும் எனக்கு உத்தியோகபூர்வமாக இந்த தீர்மானம் குறித்து அறிவிக்கப்படவில்லை. அதனால், அது குறித்த நடவடிக்கை பற்றி யோசிக்கவில்லை’ என்றார்.

‘கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது, மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ஷ இருவரையும் ஆதரிப்பதில்லை என நாங்கள் எடுத்துக்கொண்ட முடிவின் அடிப்படையிலேயே, இந்த ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட்டது’ என்றும் அவர் மேலும் கூறினார்.