Breaking News

எங்கள் கூட்டத்தில் யூதாஸ்கள் இருந்தால்...!!

யேசு பிரானின் வாழ்க்கையில் இறுதி இராப்போசனம் மிகவும் முக்கியமானது. கூட இருந்தவர்களே அந்த மீட்பரை காட்டிக்கொடுத்த கயமை நடந்தேறுகிறது.

அந்தக் கொடுமை எப்படியாக இருந்திருக்கும் என்பதை யாராவது அறியவேண்டுமாயின் யாழ்ப்பாணம் திருமறைக் கலாமன்றத்தின் திருப்பாடுகளின் காட்சி என்ற நாடகத்தைப் பார்ப்பதுதான் ஒரேவழி.

யூதாஸ் என்பான் யேசுநாதரைக் காட்டிக் கொடுத்ததால் அந்த மீட்பர் பட்ட அவலத்தை திருப்பாடுகளில் சித்திரித்த போது நெஞ்சு நெருடிக் கொண்டது. என்னே கொடுமை! என்று உள்ளம் ஏங்கிற்று. அன்று நடந்த அந்தக் கொடுமைகள் இன்று வரை நீடித்து நிற்கவே செய்கிறது.

ஆம்! விடுதலைப் போராட்டம் கூட காட்டிக் கொடுப்புகளால் மோசம் போனது என்பது ஆழ்ந்த உண்மை.எங்கள் இனத்தின் வீழ்ச்சிக்கும் இழப்புக்கும் இந்தக் கயமைத்தனங்களே காரணமாக இருந்து வருகின்றன.நம்மினம் இழந்த உரிமையை இன்னமும் பெற முடியாத அளவில் நாமே நமக்கு மாரகனாகிக் கொண்டோம்.

வன்னிப் பெருநிலப்பரப்பில் நடந்த கொடும்போர் எம்மினத்தை அழிப்புச் செய்தது. இதுவொன்றே எம்மினம் உரிமை பெறப்போதுமாக இருந்த போதிலும் அதற்கும் தடை என்றால் நாம் என்னதான் செய்ய முடியும்?
ஐக்கிய நாடுகள் சபை இலங்கை அரசின் பக்கம் ஆதரவு கொடுப்பதாக வடக்கு மாகாணசபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டை வடக்கு மாகாண முதலமைச்சர் கூறினார் என்று பார்க்காமல், இலங்கைத் திருநாட்டின் நீதியரசராக இருந்த ஒருவர் கூறியதாகப் பார்த்தால் ஈழத் தமிழ் மக்களிடம் ஐ.நா சபை பகிரங்க மன்னிப்புக் கேட்கவேண்டும் என்பதே உண்மை.

எனினும் எங்களின் அரசியல் தலைமைகளின் நெஞ்சுரமற்ற தன்மையும் இலங்கை அரசுக்கு ஆதரவாகச் செயற்படும் போக்கும் எங்களுக்கான கிடைப்பனவை இல்லாமல் செய்து விடுகிறது. இந்தக் கொடூர நிலையில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் புலிப் போராளிகள் திடீர் மரணமடைகின்ற செய்திகள் எங்கள் இதயத்தை எரித்து கருக்கிவிடுகிறது.

புனர்வாழ்வு என்ற பேரில் முன்னாள் போராளிகளுக்கு வி­சஊசி போட்டதான தகவல்கள் உலகம் முழுவதிலும் பேரதிர்ச்சியைத் தந்துள்ளது. இந்நிலையில் தமிழ் மக்களின் வாக்கைப் பெற்று பாராளுமன்ற உறுப்பினரான ஒருவர் விச­ ஊசி என்ற விடயத்தை மறுதலித்து பேசுகிறார் எனும் போது நாங்கள் மீள்வதற்கான வழியேதும் உண்டா? என்று எங்களிடம் கேட்டால் அதற்குக் கண்ணீர் மட்டுமே பதிலாக இருக்கும்.

என்ன செய்வது? பதவிக்காக இப்படியொரு கொடுமைத்தனம். ஏதோ நாம் செய்த பாவம்! எங்கள் கையால் வாக்கிட்டு எங்கள் தலையில் நாங்களே மண்ணைக் கொட்டிக் கொண்டோம் அவ்வளவு தான்.