Breaking News

கூட்டு எதிர்கட்சியின் விக்கட்டொன்று விழப்போகிறது!



முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அரசாங்கத்தில் இணைய தயாராகி வருவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரம்புக்வெல்ல அரசாங்கத்தில் இணைய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அனுமதியும் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஜனாதிபதி நிதியத்தில் இருந்து பணத்தை மோசடியாக பெற்றதாக கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நிதி மோசடி விசாரணைப் பிரிவு நடத்திய விசாரணைகள் முடிவடைந்துள்ளது. மோசடி நடந்துள்ளதை சட்டமா அதிபர் திணைக்களமும் உறுதிப்படுத்தியுள்ளது.

ரம்புக்வெல்ல அரசாங்கத்தில் இணைந்து கொள்வதற்கு இதுவே காரணம் எனக் பேசப்படுகிறது.

கெஹெலிய ரம்புக்வெல்ல 2012 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் உள்ள ஹொட்டல் ஒன்றின் மூன்றாவது மாடியின் பார்த்திருப்பில் கீழே விழுந்து காயத்திற்கு உள்ளானார்.

காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக அவர் ஜனாதிபதி நிதியத்தில் இருந்து இரண்டு கோடி ரூபாவை பெற்றுக்கொண்டார்.

அவுஸ்திரேலியாவின் எல்பர்ட் ஹெலத் வைத்தியசாலையில் கெஹெலிய சிகிச்சை பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கெஹெலிய தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டே அப்போது அவுஸ்திரேலியாவுக்கு சென்றிருந்ததுடன் அவர் தங்கியிருந்த ஹொட்டல் நிர்வாகம் அனைத்து மருத்துவ செலவுகளை ஏற்றுக்கொண்டமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இப்படியான நிலையில், ஜனாதிபதி நிதியத்தில் இருந்து இரண்டு கோடி ரூபாவை பெற்றதன் மூலம் மோசடி செய்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடும் நோய்களின் போது மருத்துவச் செலவுக்கு பணத்தை தேடிக்கொள்ள முடியாத வறிய நிலையில் இருக்கும் மக்களுக்கு நிதியுதவி வழங்கும் ஜனாதிபதி நிதியத்தில் இருந்து கடந்த அரசாங்கத்தின் அரசியல்வாதிகள் கோடிக்கணக்கில் பணத்தை பெற்றுக்கொண்டுள்ளனர்.

தற்போதைய அரசாங்கத்திலும் இது நடந்து வருகிறது. சாதாரண நோயாளி ஒருவர் ஒரு குறிப்பிட்ட தொகையை மாத்திரமே ஜனாதிபதி நிதியத்தில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும்.

எனினும் அமைச்சர்கள் வெளிநாடுகளில் சிகிச்சை பெறுவதற்காக ஜனாதிபதி நிதியத்தில் இருந்து கோடிக்கணக்கில் பணம் வழங்கப்பட்டுள்ளது.

எது எப்படி இருந்த போதிலும் நிதி மோசடி குற்றச்சாட்டை எதிர்நோக்கி இருக்கும் கெஹெலிய ரம்புக்வெல்ல போன்ற நபர்களை அரசாங்கத்தில் இணைத்துக் கொள்வதானது நல்லாட்சி வேகமாக தேய்ந்து பள்ளத்தில் விழுவதற்கான அடையாளம் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் மகிந்த ஆதரவாளர்களில் மேலும் ஒரு தொகுதியினர் நல்லாட்சி அரசாங்கத்தில் இணைந்து கொள்ளவுள்ளனர் என கொழும்பு அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்கள் அனைவரும் கடந்த மகிந்த ஆட்சிக்காலத்தில் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுக்களை எதிர் நோக்கிவருகின்றனர்.

மேலும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மோசடி குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ள அமைச்சர்களுக்கு எதிரான விசாரணைகள் சீர்குலைந்து போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.