Breaking News

கிளிநொச்சியை சிங்களமயப்படுத்தும் இராணுவ முயற்சி தடுத்து நிறுத்தப்பட வேண்டும்!



கிளிநொச்சி மாவட்டத்தை முற்றுமுழுதாக சிங்களமயப்படுத்தும் இராணுவத்தினரின் செயற்பா டுகளை தடுத்துநிறுத்துவதற்காக தமிழ் மக்கள் அனைவரும் வேறுபாடுகளை மறந்து ஓரணியில் ஒற்றுமையாக ஒன்றுதிரளவேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.

கிளிநொச்சி இரணைமடு குளத்துக்கு அருகில் அமைந்துள்ள கனகாம்பிகை ஆலயத்தில் புத்தர் சிலையை அமைக்கும் இராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே குறித்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் தேசிய மக்கள் முன்னணியினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘கிளிநொச்சி மாவட்டம் இரணைமடுக் குளத்துக்கு அருகில் அமைந்துள்ள கனகாம்பிகை ஆலயத்தின் மூன்றாம் வீதியில் இராணுவத்தினரால் புத்தர் சிலை வைக்கப்பட்டு பாரிய புத்த கோயிலாக மாற்றும் நோக்கில் மதில் அமைக்கப்பட்டு வருகின்றது.

இலங்கை அரசு தனது இராணுவ மற்றும் அரச அதிகாரத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளும் மேற்படி அத்துமீறிய பௌத்தமயமாக்கல் நடவடிக்கையை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றது.

வடக்குப் பிரதேசத்தில், முழுமையாக தமிழ் மக்கள் செறிந்துவாழும் பகுதியாக கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைமடு பிரதேசம் விளங்குகிறது. இங்கு தமிழரின் பண்பாட்டு அடையாளங்களை அழித்து பௌத்த மேலாதிக்கத்தை ஏற்படுத்தி படிப்படியாக சிங்களக் குடியேற்றங்கள் மற்றும் இராணுவக் குடியேற்றங்களை ஏற்படுத்தி தமிழர்களது சனத்தொகை பரம்பலை மாற்றியமைக்கும் நோக்கிலேயே மேற்படி பௌத்த விகாரை அமைக்கப்பட்டுவருகின்றது.

ஆட்சிகள் மாறியபோதும் சிங்கள தேசத்தின் அணுகுமுறை மாறுவதில்லை என்பதை இது மீண்டும் எமக்கு எடுத்துரைக்கின்றது. இராணுவத்தினரைப் பயன்படுத்தி தமிழ் மக்கள் மத்தியில் அச்சத்தையும், அமைதியின்மையையும் ஏற்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் இனவழிப்பு நடவடிக்கையின் ஓர் அங்கமான மேற்படி பௌத்த கோவில் அமைக்கும் செயற்பாடு உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்” என்றும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.