மைத்திரி, ரணில், சம்பந்தனை இன்று சந்திக்கிறார் நோர்வே பிரதமர்
விடுமுறையைக் கழிப்பதற்காக தனிப்பட்ட பயணமாக கடந்தவாரம் சிறிலங்கா வந்திருந்த நோர்வே பிரதமர் எர்ணா சொல்பேர்க், இன்று சிறிலங்கா அரச தலைவர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
தனிப்பட்ட பயணத்தை முடித்துக் கொண்டு இன்றும் நாளையும் நோர்வே பிரதமர் சிறிலங்காவின் அதிகாரபூர்வ விருந்தினரானப் பயணத்தைத் தொடரவுள்ளார்.
இன்று காலை நோர்வே பிரதமர் எர்ணா சோல்பேர்க்கிற்கு சிறிலங்கா அதிபர் செயலகத்தில் அவருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படும். இதையடுத்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து இருதரப்புப் பேச்சுக்களை நடத்துவார்.
இதன் பின்னர், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் ஆகியோரையும் நோர்வே பிரதமர் சந்திப்பார். அத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனையும் அவர் இன்று சந்திக்கவுள்ளார்.
இன்றுமாலை லக்ஸ்மன் கதிர்காமர் நிறுவகத்தில், லக்ஸ்மன் கதிர்காமர் நினைவுரையை ஆற்றவுள்ள நோர்வே பிரதமர், நாளை மீரிஸ்ஸ மீன்பிடித் துறைமுகத் திட்டத்தைப் பார்வையிடுவார்.
அத்துடன் காலி கோட்டைக்கும் சென்று பார்வையிடவுள்ளார் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.