Breaking News

உலகின் எந்த சக்தியாலும் ஜம்மு காஷ்மீரை இந்தியாவில் இருந்து பிரிக்க முடியாது

காஷ்மீர் கலவரத்துக்கு காரணம் பாகிஸ்தான் தான் என டெல்லி மேல்-சபையில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டினார். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண நாளை அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

காஷ்மீரில் வன்முறை காரணமாக தொடர்ந்து 33-வது நாளாக தடை உத்தரவு நீடிக்கிறது. இந்த பிரச்சினை தொடர்பாக டெல்லி மேல்-சபையில் நேற்று விவாதம் நடந்தது. 

அப்போது பல்வேறு கட்சி எம்.பி.க்களும் தங்கள் கருத்துகளையும், ஆதங்கத்தையும் தெரிவித்தனர். இந்த விவாதம் சுமார் 7 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது.

இதற்கு பதில் அளித்து மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பேசியதாவது:-

காஷ்மீர் மாநிலத்தில் தொடர்ந்து அமைதியற்ற நிலை நீடிப்பது கவலை அளிக்கிறது. அந்த மாநில மக்களின் வலியை நாங்களும் பகிர்ந்து கொள்கிறோம். மாநில சட்டம் ஒழுங்கை ராணுவத்திடம் ஒப்படைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. அது வெறும் வதந்தி தான். காஷ்மீர் மக்கள் அமைதியாக இருக்கிறார்கள் என்று நான் ஒரு போதும் கூறவில்லை.

அங்கு அமைதியை ஏற்படுத்த கடந்த மாதம் 23, 24-ந் தேதிகளில் நான் ஸ்ரீநகர், அனந்த்நாக் ஆகிய இடங்களுக்கு சென்றேன். அந்த மாநில முதல்-மந்திரி மெகபூபா முப்தி மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு அமைப்பினரை சந்தித்து பேசினேன். அதன் பிறகும் அங்கு அமைதி திரும்பவில்லை.

எனினும் காஷ்மீரில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு எதுவும் ஏற்படவில்லை. மாநில அரசு அங்கு அமைதியை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்வதுடன், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளேன். அங்கு தடை உத்தரவு நீடித்து வந்தாலும் உணவு தானியங்கள், கியாஸ் சிலிண்டர் ஆகியவை வழக்கம் போல் வினியோகிக்கப்பட்டு வருகின்றன.

காஷ்மீர் கலவரத்தில் 4,500 பாதுகாப்பு படையினர், 3,300 பொதுமக்கள் காயம் அடைந்துள்ளனர். 100-க்கும் மேற்பட்ட ஆம்புலன்சுகள் சேதப்படுத்தப்பட்டு உள்ளன. 'பெல்லட்' துப்பாக்கி தாக்குதலால் 100-க்கும் அதிகமானோர் கண் பார்வை பாதிக்கப்பட்டனர். எனவே அந்த வகை துப்பாக்கியை பயன்படுத்த வேண்டாம் என பாதுகாப்பு படையினருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தீவிர பார்வை பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு டெல்லி 'எய்ம்ஸ்' மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காஷ்மீரில் அமைதி திரும்ப பாதுகாப்பு படையினர் அதிகபட்ச பொறுமை காக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்களும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும். அதற்காக நாட்டின் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிப்பதையும், இந்தியாவுக்கு எதிராக கோஷம் போடுவதையும் பொறுத்துக்கொள்ள முடியாது.

கலவரம் தொடர்பாக விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த கமிட்டி விரைவில் தங்கள் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த பிரச்சினை தொடர்பாக பாகிஸ்தான் அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தவும் நாங்கள் தயாராக உள்ளோம். ஆனால் காஷ்மீரை யாருக்கும் விட்டுக்கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை. அங்கு தொடர்ந்து கலவரம் ஏற்படுவதற்கு பாகிஸ்தானின் தலையீடு தான் காரணம். 

காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண நாளை (வெள்ளிக்கிழமை) பிற்பகல் டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடியும் பங்கேற்க இருக்கிறார். 

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் காஷ்மீர் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுதாபம் தெரிவித்தும், அங்கு அமைதி திரும்பவும் மேல்-சபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக காஷ்மீர் விவாதத்தில் அ.தி.மு.க. எம்.பி. நவநீதகிருஷ்ணன் பேசும்போது, காஷ்மீருக்கும், தமிழ் சினிமாவுக்கும் உள்ள தொடர்பு குறித்து பேசினார். அப்போது அவர், எம்.ஜி.ஆர். நடித்த 'இதய வீணை' படத்தில் 'காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர்' என்ற பாடலை எம்.ஜி.ஆர். பாடுவது போல பாடி காட்டினார். இதனால் நவநீதகிருஷ்ணனிடம் அந்த பாட்டை முழுவதுமாக பாடுமாறு மேல்-சபை தலைவர் கேட்டு அவரை உற்சாகப்படுத்தினார். இதை தொடர்ந்து மேலும் சில வரிகளை நவநீதகிருஷ்ணன் பாடினார். 

மேலும் அவர் பேசுகையில், எங்கள் மாநில கர்ப்பிணிகள் தங்கள் குழந்தைகள் சிவப்பாக பிறக்க காஷ்மீரில் இருந்து வரும் குங்குமப்பூவை பாலில் கலந்து அருந்துகின்றனர். மேலும் பல தமிழ் திரைப்படங்கள் அமைதியான, அழகான காஷ்மீரில் படமாக்கப்பட்டு உள்ளன. தற்போது அங்கு நிலவும் சூழ்நிலை வருத்தம் அளிக்கிறது என்றார்.