Breaking News

அல்லிராஜாவுக்கும் ஐ.நா இல் அதியுயர் விருது



லைக்கா ஞானம் அறக்கட்டளையின் இணை நிறுவுனர் திருமதி ஞானாம்பிகை அல்லிராஜாவுக்கு ஜி.ஒ.டி எனப்படும் மாண்புமிக்க உலக அதிகாரிகள் அமைப்பு (Global Officials of Dignity ) அதியுயர் விருது வழங்கி மதிப்பளித்துள்ளது.

நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபைத் தலைமையக வளாகத்தில் நேற்று (17. 08 2016) இளவரசி மரியா அமொர் தலைமையில் வி. சீ எச் We Care for Humanity (WCH) அமைப்பின் 3வது வருடாந்த மாநாடு இடம்பெற்றபோது இந்த சிறப்பு மதிப்பளிப்பு இடம்பெற்றுள்ளது.

அமெரிக்க தேசிய கீதத்துடன் ஆரம்பமான முதல்நாள் மாநாட்டில் பல பேராளர்கள் முக்கியமான தலைப்புகளில் தமது கருத்துரைகளை வழங்கியிருந்தனர். உலகின் கல்வி , சுகாதாரம், அமைதி, மனிதஉரிமை, பசுமைச் சூழல் ஆகிய தலைப்புகளில் பேராளர்களின் உரைகள் வழங்கப்பட்டன.

மாநாட்டின் முதற்பகுதி நிறைவடைந்த பின்னர் சிறப்பு நிகழ்வாக விருது வழங்கல் இடம்பெற்றது. லைக்கா ஞானம் அறக்கட்டளைக்கும் அதன் இணை நிறுவனரான திருமதி ஞானாம்பிகை அல்லிராஜாவுக்கும் சேர்த்தே இந்த மதிப்பளிப்பு வழங்கபட்டுள்ளது.

திருமதி ஞானாம்பிகை அல்லிராஜாவுக்கு வி. சீ எச் அமைப்பின் சார்பில் இந்த ஆண்டின் சிறந்த பெண்மணி என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த விருதை மாட்சிமை மிக்க சவூதி இளவரசர் பைசல் அல் சவுட் மற்றும் ஐ.நாவுக்கான பெனினின் நிரந்தரத் தூதர் பிரான்சிஸ் சின்சூ ஆகியோர் வழங்கினர்

இதேபோல 2016 ஆம் ஆண்டுக்கான உலகின் பெரிய மனிதாபிமான அமைப்புக்கான சிறப்பு விருது லைக்கா ஞானம் அறக்கட்டளையின் நிறுவனரும் லைக்கா குழுமத்தின் தலைவருமான சுபாஸ்கரன் அல்லிராஜா அவர்களுக்கும் அவரது தயாரும் அறக்கட்டளையின் இணை நிறுவுனருமான ஞானாம்பிகை அல்லிராஜாவுக்கும் இணையாக வழங்கப்பட்டது.

இந்த விருது மதிப்புக்குரிய ரோசலியா ஆர்த்திகா, மதிப்புக்குரிய கைல் ராஜ் ரெஜ்மி, மதிப்புக்குரிய ஸ்ரிபன் ஹலொன்சோ முஸ்ஜோகா ஆகியோரால் வழங்கப்பட்டது.

இதனைவிட நியூயோர்க் செனட்டர் டேவிட் கார்லூசி அவர்களின் சான்றிதழும் வழங்கப்பட்டது. லைக்காஞானம் அறக்கட்டளையின் அயராத உழைப்பு அர்ப்பணிப்பு ஆகிய பண்புகளை முன்னிட்டு இந்தப் பாராட்டு வழங்கப்படுவதாக செனட்டர் டேவிட் கார்லூசி குறிப்பிட்டுள்ளார்

லைக்கா குழுமத்தின் தலைவர் சுபாஸ்கரன் அல்லிராஜா மற்றும் அவரது அன்னை ஞானாம்பிகை அல்லிராஜா ஆகியோர் 2010 இல் தோற்றுவித்த லைக்கா ஞானம் அறக்கட்டளையானது இலங்கை உட்பட பல நாடுகளில் தனது மனிதாபிமான சேவையை மேற்கொண்டு வருகின்றது.

வறிய குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது மற்றும் அவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துதல் உள்ளிட்ட பல தொண்டுப் பணிகளில் ஞானம் அறக்கட்டளை மேற்கொண்டு வரும் சேவையைப் பாராட்டியே இந்த விருதும் மதிப்பளிப்பும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.