உத்தரபிரதேசத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கனமழைக்கு 13 பேர் பலி
உத்தரபிரதேசம் மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரங்களில் நேரிட்ட மழை தொடர்பான விபத்து சம்பவங்களில் 13 பேர் உயிரிழந்தனர் என்று உள்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நேற்று மாலையில் இருந்து மத்திய மற்றும் கிழக்கு உத்தரபிரதேசத்தில் கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக பல்வேறு பகுதியில் வீடுகள் இடிந்து விழுந்து உள்ளது, மழை நீர் தேங்கிஉள்ளது. ரேபரேலியில் மண் வீடு இடிந்து விழுந்ததில் 6 பேர் பலியாகினர் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. குரிகாதி கிராமத்தில் மின்னல் தாக்கியதில் இருவர் உயிரிழந்தனர். இதேபோன்று சிதாபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்திலும் மின்னல் தாக்கியதில் தாய் - மகள் பலியாகினர். லக்னோவில் வீடு இடிந்து விழுந்ததில் மூவர் உயிரிழந்தனர். கனமழை காரணமாக ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
பராய்ச் மாவட்டத்தில் காக்ரா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் 24-க்கும் அதிகமான கிராமங்கள் வெள்ளநீரில் மிதக்கிறது. கயாம்பூர் கிராமத்தில் அதிகமான வீடுகள் அடித்து செல்லப்பட்டது.
கடந்த 5 நாட்களாக கனமழை பெய்து வருவதன் காரணமாக சித்ராகோட் மாவட்டத்தில் சாலைகளில் தண்ணீர் தேங்கிஉள்ளது. தேசிய நெடுஞ்சாலை 76-ல் வாகனங்கள் செல்ல முடியாமல் அங்கேயே நிற்கிறது. பலியா மாவட்டத்தில் கங்கை ஆற்றில் தண்ணீர் அபாய கட்டத்திற்கு மேல் செல்வதால் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. கங்கை ஆற்றியில் ஏற்கனவே தண்ணீர் அபாய கட்டத்திற்கு மேல் ஒரு மீட்டர் அளவு தண்ணீர் செல்கிறது. தொடர் மழை காரணமாக இங்கு 100-க்கும் அதிகமான கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது.
ஷாம்லி மாவட்டத்தில் யமுனை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக விவசாய நிலங்கள் தண்ணீரில் மிதக்கிறது. தண்ணீர் அதிகமாக செல்வது எச்சரிக்கையாக எழுந்து உள்ளது.
மாநிலத்தில் அடுத்த 48 மணிநேரங்களுக்கு மழை நீடிக்கும் என்று உள்ளூர் வானிலை மையம் தெரிவித்து உள்ளது.