காணாமல் போனோர் தொடர்பில் சான்றிதழை பெறுங்கள்..!!- சுமந்திரன் தெரிவிப்பு
அரசு வழங்கும் இச்சான்றிதழை பெற்றுக்கொள்வதன் மூலம் சட்டச் சிக்கல்களுக்கு தீர்வை பெற் றுக்கொள்ள முடியும். காணாமல்போனோர் என்ற சாபத்திற்கு விமோசனம் காணவேண் டும். அது தொடர இடமளிக்கக் கூடாது என்று
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி. எம்.ஏ.சுமந்திரன் நேற்று சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற இறப்புக்களின் பதிவு (தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சபையில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
காணாமல்போனவர்கள் தொடர்பாக கண்டறியும் அலுவலகம் அமைப்பது தொடர்பான சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட பின்னர் இச்சபையில் கொண்டுவரப்பட்ட முக்கியமான சட்டமூலம் காணாமல்போனதற்கான சான்றிதழ் வழங்கும் இன்றைய சட்டமூலமாகும்.
மோதல்கள் உக்கிரமடைந்த கால கட்டத்திலும், சுனாமிக்கு பின்னரும் ஆயிரக்கணக்கானோர், காணாமல்போயினர். அவர்கள் இறந்து விட்டார்களா அல்லது உயிருடன் இருக்கின்றார்களா என்பது இன்றும் புரியாத புதிராக இருந்துகொண்டுள்ளது.
தமது பிள்ளைகள், கணவர்மார், தந்தை, தாய், சகோதரன், சகோதரி என பலர் காணாமல்போயுள்ளனர். அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தெரியாமல் உறுப்பினர்கள் இன்னமும் காணாமல்போனார்கள் திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கையுடன் உள்ளனர்.
அது மட்டுமன்றி காணாமல்போனவர்களின் குடும்பங்களை சேர்ந்தவர்கள் தமது சொத்துக்கள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் சட்ட சிக்கல்களுக்கும் முகம்கொடுத்துள்ளனர். இது பாரியதொரு பிரச்சினையாக தலைதூக்கியுள்ளது.
கடந்த ஆட்சிக் காலத்தில் நல்லிணக்க ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. அக்குழுவுக்கு காணாமல்போனோர் தொடர்பாகவும் பல ஆயிரக் கணக்கில் முறைப்பாடுகள் கிடைத்தன.
இது தொடர்பில் நல்லிணக்க ஆணைக்குழு பல பரிந்துரைகளை முன்வைத்தது. அப்பரிந்துரைகளை நிறைவேற்றுமாறு 2012, 2013 ஆம் ஆண்டுகளில் ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு பிரேரணைகளை நிறைவேற்றியது. இலங்கை அரசுக்கு யோசனைகளை முன்வைத்தது.
ஆனால் கடந்தகால ஆட்சியாளர்கள் இதனை உதாசீனம் செய்தார்கள். பரிந்துரைகளை நிறைவேற்ற முயற்சிக்கவில்லை.
இதேபோன்று பரணகம உட்பட பல ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டன. ஆனால் பிரதிபலன்கள் எதுவுமே ஏற்படவில்லை.
எனவே காணாமல்போனவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் உறவினர்கள் தெரிந்து கொள்ளவேண்டும். நாம் அதற்கு உதவ வேண்டும்.
காணாமல்போனர்களின் குடும்பங்கள் தமது காணாமல்போன கோழிகள், ஆடுகளுக்கு என்ன நடந்தது எனக்கேட்கவில்லை. தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை அறியவே ஆர்வமாக உள்ளனர்.
எனவே கடந்த காலங்களில் அமைக்கப்பட்ட ஆணைக்குழுக்களில் அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை.
அத்தோடு கடந்த ஆட்சிக்காலத்தில் காணாமல்போனவர்களின் உறவினர்கள் மரண சான்றிதழைபெற வேண்டும் என அழுத்தம் கொடுத்து முன்னாள் žஜனாதிபதியின் மகனொருவர் லஞ்சம் கொடுத்தார்.
பரணகம ஆணைக்குழுவிற்கு 20, 000 மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்தன. இவ்வாறானதொரு நிலையில் மரண சான்றிதழுக்கு பதிலாக காணாமல்போன சான்றிதழ் வழங்க அரசு சட்டமூலத்தை முன்வைத்ததை வரவேற்கின்றோம்.
அதாவது மரணிக்கவில்லை. காணாமல்போயுள்ளார்கள் என்பது இச்சான்றிதழ் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.
தமது உறவுகள் மரணித்து விட்டார்கள் என்பதைக் காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்கள் ஏற்றுக்கொள்வதற்கு இன்னும் தயாரில்லை. எனவே மரண சான்றிதழை பெற விரும்பவில்லை.
எனவே காணாமல்போனவர்களின் குடும்பங்களிற்கு ஒரு வேண்டுகோளை விடுக்க விரும்புகிறேன். காணாமல்போன சான்றிதழை பெற்றுக்கொள்ள வேண்டாம் என சிலர் பொய்யான தகவல்களுடன் செய்திகளை பரப்புகின்றனர். இதற்கு ஏமாற வேண்டாம். காணாமல்போன சான்றிதழை பெற்றுக்கொள்வது என்பது அந்நபர் மரணித்து விட்டார் என்று ஏற்றுக்கொண்டதாக அமையாது.
அரசாங்கம் காணாமல்போனதை ஏற்றுக்கொண்டே இச்சான்றிதழை வழங்குவதோடு அது தொடர்பிலான விசாரணைகளும் தொடரும். விசாரணைகள் ஒரு போதும் நிறுத்தப்படமாட்டாது. இது தான் உண்மை.
காணாமல்போனவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அரசு விசாரணை நடத்தி தீர்மானத்திற்கு வரும். காணாமல்போனவர் எப்படி இறந்தார்? என்ன நடந்தது? என்பது தெரியாதபட்சத்தில் அந்நபர் காணாமல்போனவர் என்பது இச்சான்றிதழ் மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது.
இச்சான்றிதழ் மூலம் காணாமல்போனவர்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் எதிர்நோக்கும் சட்டப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியும். இச்சட்டமூலத்தை நிறைவேற்றுவதன் மூலம் காணாமல்போனவர்கள் என்ற சாபத்திற்கு விமோசனம் காண முடியும் என்றார்.