தெற்கின் எடுபிடிகளாக எம்மை மாற்ற நினைப்பதை வரவேற்க மாட்டோம்!
வடமாகாண அபிவிருத்தித் தேவைகளின் கணிப்பு பற்றிய கூட்டம் கொழும்பில் திரு.பாஸ்கரலிங்கம் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயல்திட்ட நிறுவனம் ஆகியவற்றின் அதிகாரிகள் ஆகியோருடன் வடமாகாண முதலமைச்சர், அந்நிய வளத் திணைக்களம், சந்திரிகாவின் செயலணியின் செயலாளர் போன்றோரும் பங்குபற்றியிருந்தனர்
முதலில் முதலமைச்சரை, தமது கருத்துக்களை கூறுமாறு வேண்டப்பட்டது.முதலமைச்சர் தனது உரையில் பின்வருவனவற்றை முன்வைத்தார்.
2003ல் ஒரு தேவைகள் கணிப்பு நடைபெற்றது. பின்னர் 2004ல் சுனாமியும் 2009ல் போரின் முடிவுக்கட்டமும் பல விதமான பாதிப்புக்களையும் அழிவுகளையும் கொண்டு வந்தன.
எனவே புதியதொரு கணிப்பு நடைபெறுவது அவசியமாகிறது.2010ல் பாக்கிஸ்தானில் கைபர் கணவாய் சார்ந்த இடத்தில் இவ்வாறான கணிப்பொன்று நடந்தது.
அதில் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, ஐக்கிய நாடுகளுடன் ஐரோப்பிய ஒன்றியமும் ஈடுபட்டது. இங்கும் ஐக்கிய ஒன்றியத்தை அழைப்பது நன்மை பயக்கும் என்று நம்புகின்றேன்.
அந்தக் கூட்டத்தில் சமஷ்டி உரித்து வழங்கப்பட்ட ஆதிவாசிகளின் மாகாண அரசாங்கமும் முழுமையாகப் பங்கேற்றது. இதேபோல் இந்தக் கணிப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தையும் எமது வடமாகாண சபையையும் உள்ளடக்கி கணிப்பைச் செய்யுமாறு வேண்டிக்கொள்கின்றேன்.
எம்முடன் கலந்துறவாடாது இப்பேர்ப்பட்ட செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துவது எம்மீது உங்கள் கருத்துக்களைத் திணிப்பதாக அமையும்.
இதனால்த்தான் எம்மக்களின் பிரதிநிதிகளையும் சேர்த்து இவ்வாய்வைக் கொண்டு நடத்துமாறு வேண்டிக்கொள்கின்றேன். பாகிஸ்தானிய செயற்திட்டத்தின் போது 4 கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. முதலாவது, நாட்டரசாங்கத்தின் மீது பாதிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கை வளர உதவி செய்ய வேண்டும்.
இரண்டாவதாக, வேலைவாய்பை உருவாக்கி வாழ்வாதார சந்தர்ப்பங்களை உருவாக்கல். மூன்றாவது மக்களின் ஆதார வசதிகளைக் கொடுத்துதவுதல்.
நான்காவது தீவிரவாதத்தைத் தடுக்க நல்லிணக்கத்தை உருவாக்குதல். இவற்றை வைத்தே பாகிஸ்தானில் தேவைகள் பற்றிய கணிப்பில் இறங்கினார்கள்.
எமது கணிப்பு பற்றிய விரிவெல்லையை நிர்ணயிக்கும் இந்தக் கூட்டத்தில் மேற்கண்ட விடயங்களை நாங்கள் கருத்திற்கெடுத்தல் நன்மை பயக்கும்.
எமது மக்களின் நம்பிக்கையைப் பெற உங்கள் வினைத்திறனான செயற்பாடு உதவியளிக்கும். வேலையில்லாதோரின் விபரங்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு வேலை வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்க நீங்கள் உதவி செய்யலாம்.
மக்களின் ஆதார வசதிகளைப் பெற்றுக்கொடுக்க வழிவகுக்கலாம். நல்லெண்ணத்தை உருவாக்க உங்களின் ஒத்துழைப்பு உதவி புரியும். ஆகவே முன்னெச்சரிக்கையுடன் கணிப்பின் விரிவெல்லையை நிர்ணயிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
இவ்வாறான கணிப்பு தொடர்ந்திருக்கக் கூடிய அபிவிருத்தியை உறுதிப்படுத்த வேண்டும். பல்விதமான போரினால் உண்டாக்கப்பட்ட பௌதீக ரீதியான, மனோரீதியான பாதிப்புக்களை நீங்கள் கண்டறிய வேண்டும்.
அவற்றில் இருந்து எம்மக்களை காப்பாற்றி வழிநடத்தத் தேவையான செயற்திட்டங்களை வகுத்துக்கொடுக்க வேண்டும். அத்துடன் பாதிக்கப்பட்ட எம் சமூகத்தின் மிகப் பலவீனமான அலகுகளை உள்ளடக்கியதாக மேற்படி செயற்திட்டங்கள் அமைய வேண்டும்.
இவற்றிற்கான அடிப்படை தரவுகள் சரியன முறையில் கண்டறியப்பட வேண்டும். முன்னர் தயாரிக்கப்பட்டு தற்போது நடைமுறையில் ஏற்றுக்கொள்ளப்பட்டு வரும் தரவுகள் பிழையானவை.
உதாரணத்திற்கு விதவைகளைத் தமது கணவன்மார்கள் போரினால் இறந்தார்கள் என்று சொல்ல வேண்டாம் என்று அலுவலர்கள் நிர்ப்பந்தித்ததனால் விதவைகள் 7000க்கு மேல் என்றும், இயற்கை மரணம் எய்தியோர் 29000 என்றும் கூறப்பட்டுள்ளது.
புள்ளி விபரங்கள் பொய் விபரங்களாக அமையக் கூடாது. மக்களின் அடிமட்டத்தில் இருந்து உண்மையான தரவுகள் பெறப்பட வேண்டும். 2003ல் தயாரிக்கப்பட்ட தேவைகள் கணிப்பில் மீள்குடியேற்றம், சுகாதாரம், கல்வி, வீடமைப்பு, கட்டுமானங்கள், விவசாயம், வாழ்வாதாரமும் வேலைவாய்ப்பும். மேலும் ஆற்றல் அபிவிருத்தியும் நிர்வாகச் சீரமைப்பும் போன்ற விடயங்கள் கணக்கிற்கு எடுக்கப்பட்டன.
அதன் பின் நடைபெற்ற பாதிப்புக்கள் யாவும் கணக்கிற்கு எடுக்கப்பட வேண்டும்.நிரந்தரமான சகலரையும் உள்ளடக்கி முன்னேறும் அபிவிருத்தியே எங்கள் எதிர்பார்ப்பு.
எமது வளங்கள் சூறையாடப்படாமல் பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். சுற்றுலாத்துறையில் பிராந்திய ரீதியில் பெருந்திட்டமொன்று தயாரிக்கப்பட வேண்டும்.
எமது வாழ்விடங்கள் விவசாயம், மீன்பிடி என்ற இருவித தொழில்களுடன் பாரம்பரியமாகப் பரீட்சயப்பட்ட பிராந்தியமாகும். அவற்றை மையமாக வைத்து கைத்தொழில்கள் நடாத்தப்பட வழிவகுக்க வேண்டும்.
சிறிய மத்திய தொழில் முயற்சிகளில் நாம் இறங்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. பாரிய தொழிற்சாலைகள் பாரிய கட்டிடங்கள் ஆகியன எமது நில அமைப்புக்கும், கலாசார பின்புலத்திற்கும் ஒவ்வாதன என்பதே எமது கணிப்பு.
அவை பற்றி ஆராயுங்கள். கூட்டுறவு அடிப்படையில் தொழில் முயற்சிகளும் கைத்தொழில்களும் நடப்பது உசிதம் என்றே நாம் நம்புகின்றோம்.
மேலும் எம் இளைய சமுதாயத்தின் திறன்களை அவதானிக்கும் போது தகவல் தொடர்பு சம்பந்தமான தொழில்கள், காரியாலய பின்னணி வசதிகள் ஏற்படுத்தல் (Back office facilities), பொருளாதாரத் துறைசார்ந்த தொழில்கள் போன்றவற்றை ஏற்படுத்திக்கொடுத்தலை அவர்கள் வரவேற்பார்கள் என்று எண்ண இடமுண்டு.
எமது தேவைகள் சம்பந்தமான கணிப்பாய்வை ஐக்கிய நாடுகள் சென்ற வருடம் வெளிக்கொண்டு வந்த 2015ம் ஆண்டுக்குப் பின்னரான தொடர் அபிவிருத்திக்கான நிகழ்ச்சி நிரலின் ஏற்பாடுகளுக்கு அமைய கொண்டு நடத்துவது நன்மை பயக்கும் என்று எண்ணுகின்றேன்.
இதை உசாத்துணையாக வைத்து முன்னேறுவது நல்லது.எம்மைப் பொறுத்தவரையில் வடமாகாணத்தைத் தற்போதைய பலவீன நிலையில் இருந்து எழுப்பி மற்றையவர்களுக்கு ஈடாக நிமிர்த்தி வைப்பதே குறிக்கோள்.
அபிவிருத்திப் பணியில் எமது புலம்பெயர் மக்கள் பிரதானமான பங்கினை ஆற்ற வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பு. தனியார் முதலீடுகளை நாம் வரவேற்கின்றோம். ஆனால் எம்மைப் பிடித்து விழுங்கும் நோக்குடன் எவரும் எம்மிடம் வருவதை நாம் வரவேற்க மாட்டோம். எம்மைத் தெற்கின் எடுபிடிகளாக மாற்றப் பார்ப்பதை நாம் வரவேற்க மாட்டோம்.
எமது அலுவலர்கள் பலர் மேலிடத்து ஆணைகளை நடைமுறைப்படுத்துபவர்களாகவே சென்ற முப்பது வருடங்களாக இயங்கி வந்துள்ளார்கள்.
புதிய ஜனநாயக சூழலில் தாமாகவே சிந்தித்துச் செயலாற்றும் பக்குவத்தை அவர்களுக்கு வழங்க நீங்கள் முன்வர வேண்டும். எமது தொழிற்திறன் அபிவிருத்திக்கு நீங்கள் ஆவன செய்ய வேண்டும்.
துறைசார்ந்த விடயங்கள் சம்பந்தமாக எம் அமைப்புக்களால் தரப்பட்டவை என் வசம் உள்ளன. ஆனால் அவை இத்தருணத்தில் உங்களுக்குத் தேவையற்றவை என்பதை உணர்கின்றேன்.
எனவே கடைசியாக எமது எதிர்பார்ப்புக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகின்றேன்.எம்முடன் கலந்தாலோசித்து முன்னேற வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.
எனது அமைச்சின் செயலாளருடன் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கைகளை எடுங்கள் என்று கூறி வைக்கின்றேன். எமது இந்த தேவைகள் கணிப்பு திறம்பட நடந்தால் சர்வதேச பல்நிறுவன செயற்திட்டம் ஒரு வெற்றித் திட்டமாக அமையும் என்பதில் சந்தேகம் தேவையில்லை.
எமது வடமாகாணத்தை உங்களது வெற்றியின் சின்னமாக நீங்கள் எடுத்துக் காட்டலாம். நாங்கள் உங்களுக்கு சகல உதவிகளையும் நல்க காத்து நிற்கின்றோம்.
2015க்குப் பின்னரான தொடர் அபிவிருத்திக்கான நிகழ்ச்சி நிரலுக்கு சமாந்தரமாக உங்கள் கணிப்பாய்வை நடைமுறைப்படுத்திச் செல்வது நன்மை பயக்கும்.
ஜெனிவா ஒன்றிணைந்த பிரேரணையின் ஏற்பாடுகளையும் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டுகின்றேன். போர்க்குற்ற விசாரணை முறையாக நடந்தேறினால்த்தான் சமூக நல்லிணக்கத்தை எங்கள் மக்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம் என்பதை நாங்கள் மறந்து விடக்கூடாது.
அதிகாரப் பரவல் எமது மக்களுக்கு நன்மை பயப்பதாய் அமைய வேண்டும். சமாதானத்தை ஏற்படுத்தக் கூடியதாக அமைய வேண்டும். அரசாங்கம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற நடவடிக்கைகள் எடுத்தால்த்தான் அதன் மீது மக்களுக்கு நம்பிக்கை பிறக்கும். அவ்வாறான நம்பிக்கை பிறக்க உங்கள் தேவைகள் கணிப்பாய்வு உதவி செய்வதாக.