சூழலியல் விவசாயக் கண்காட்சி நல்லூரில் ஆரம்பமாகியது!(படங்கள் இணைப்பு)
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு வடக்கு மாகாண விவசாய அமைச்சால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள ‘சூழலியல் விவசாயத்தை நோக்கி’ என்னும் விவசாயக் கண்காட்சி நேற்று திங்கட்கிழமை (22.08.2016) ஆரம்பமாகியுள்ளது. நல்லூர் ஆலயத்தின் பின்வீதியில் அமைந்துள்ள மங்கையர்க்கரசி வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்தில் இக்கண்காட்சியை வடக்கு கல்வி அமைச்சர் த.குருகுலராஜா தொடக்கி வைத்துள்ளார்.
உடல்நலத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்ற விவசாயச் செயன்முறைகளைத் தவிர்த்து உடல் ஆரோக்கியத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் நன்மைகளை விளைவிக்கக் கூடிய முறைகளை விவசாயத்தில் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கோடு காட்சிக்கூடங்கள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. நிலத்தடி நீர்வளம் மாசுறும் விதம், குடாநாட்டின் நீர்வளத்தை மேம்படுத்தும் திட்டங்கள், இரசாயன உரங்களுக்கு மாற்றீடான இயற்கைப் பசளைகள், இரசாயனப் பூச்சிகொல்லிகளுக்கு மாற்றீடான இயற்கைப் பூச்சிகொல்லிகள்,பழங்களை இயற்கையாகப் பழுக்க வைக்கும் செயன்முறைகள், அருகிவரும் சுதேசியப் பழவகைகள்,நவீன விவசாய இயந்திரங்கள்,காளான் வளர்ப்பு, தேனீவளர்ப்பு பிரதேசத்துக்கு உகந்த புல்இனங்கள், நல்லினக் கால்நடைகள்,செல்லப்பிராணிகள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளதோடு பார்வையாளர்களுக்கு இது தொடர்பாக பூரணமான விளக்கமும் வழங்கப்பட்டு வருகிறது.
காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்களினதும் வழங்கப்படும் விளக்கங்களினதும் அடிப்படையில் பார்வையாளர்களிடையே போட்டிகள் ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. மூன்று வினாக்களுக்குச் சரியான பதிலை வழங்குபவர்களுக்கு வெற்றி பெறுபவர்கள் விரும்பும் நல்லின மரக்கன்றுகள் பரிசுகளாக வழங்கப்படுகிறது.
இக்கண்காட்சியின் தொடக்க நிகழ்ச்சியில் வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன்,மாகாணசபை உறுப்பினர்கள் பா.கஜதீபன், விந்தன் கனகரத்தினம், பிரதம செயலாளர் அ.பத்திநாதன், விவசாய அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன், மாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார், மாகாண கால்நடை அபிவிருத்தி உற்பத்தி சுகாதாரத் திணைக்களப் பணிப்பாளர் சி.வசீகரன், மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் எந்திரி வே.பிறேமகுமார் ஆகியோருடன் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.
இக்கண்காட்சி பூங்காவனத் திருவிழாநடைபெறும் 02.09.2016 வரை தினமும் பிற்பகல் 2.00 மணி தொடங்கி இரவு 8.00 மணிவரையும் நடைபெறவுள்ளது. தேர் மற்றும் தீர்த்தத் திருவிழா நாட்களில் காலை 9.00 மணியில் இருந்து இரவு 8.00 மணிவரையும் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.