Breaking News

கூட்டமைப்பின் அழுத்தத்தினால் இராணுவம் வெளியேறியது என்கிறார் செல்வம்



கூட்டமைப்பின் பாரிய அழுத்ததின் பயனாக வவுனியா குடியிருப்பு கலாசார மண்டபத்தில் கடந்த 1994 ஆம் ஆண்டில் இருந்து நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் வெளியேற்றப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்க லநாதன் தெரிவித்துள்ளார்.

கடந்த 1994 ஆம் ஆண்டில் இருந்து நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் பாதுகாப்பு அமைச்சு பொது இடங்களில் இருந்து இராணுவத்தினரை வெளியேற்றும் செயற்பாட்டின் ஓர் கட்டமாக குறித்த மண்டபத்தில் இருந்து வெளியேறியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது

பல பொது அமைப்புகள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் இந்த இராணுவ முகாமை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்ததுடன் அண்மையில் வடக்கிற்கான இளைஞர் அமைப்பு என்ற அமைப்பு இவ் இராணுவ முகாமிற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.

எப்படியிருப்பினும், இன்றில் இருந்து இராணுவம் வெளியேறியுள்ளதுடன் எதிர்வரும் தினங்களில் உத்தியோகபூர்வமாக இக் கட்டிடத்தினை மாவட்ட செயலகத்திடம் ஒப்படைக்கவும் பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த செல்வம் அடைக்கலநாதன் எம்.பி., தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாரிய அழுத்தத்தின் மத்தியில் இம் முகாம் தற்போது கைவிடப்பட்டுள்ளது. கூட்டமைப்பு தொடர்ந்தும் இராணுவத்தினர் மக்களின் பகுதியில் வாழ முடியாது என கொடுத்து வரும் அழுத்தமே இதற்கு காரணமாகும்.

இம் முகாம் விடுவிக்கப்படுவதற்காக குரல் கொடுத்த கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் பொது அமைப்புகளுக்கு நன்றிகளை தெரிவிப்பதுடன் இதேபோன்ற ஒற்றுமையான செயற்பாடு தொடர்ந்தும் காணப்படவேண்டும்” என தெரிவித்துள்ளார்.