ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிளவுப்பட்டிருப்பதை மலையக மக்கள் முன்னணி விரும்பவில்லை
1948ம் ஆண்டு சுதந்திர காலத்தின் பின் உருவாக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இன்று 2, 3 ஆக உடைந்தும் பிளவுப்பட்டும் காணப்படுகின்றது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிளவுபட்டிருப்பதை மலையக மக்கள் முன்னணி விரும்பவில்லை.
அதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் அங்கம் வகிக்கும் ஜனாதிபதிகள் மூவர் இன்று இருக்கின்றனர். அவர்கள் இந்த கட்சியை பிளவுப்படுத்த இடம் கொடுக்க கூடாது என இராஜாங்க கல்வி அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஹட்டன் கிருஷ்ணபவான் மண்டபத்தில் 19.08.2016 அன்று இடம்பெற்ற மக்கள் மன்றம் என்ற தொனிபொருளிலான மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,
நல்லாட்சி அரசாங்கம் இரண்டு பலம் பொருந்திய கட்சிகளை உள்ளடக்கி அமைக்கப்பட்ட ஒன்றாகும். இன்று ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ள நிலையில் இன்னும் நான்கு வருடங்களுக்கு இந்த நல்லாட்சி அரசாங்கத்தை அசைக்க முடியாது.
அதேவேளை இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதற்கு எவர் முற்பட்டாலும் அவர்கள் முதலில் வீடு நோக்கி சென்று விடுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.