விடிவை தருமா? பான் கீ மூனின் வருகை
ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கை வருகிறார். இலங்கை வந்து என்ன செய்யப்போகிறார்? யார் யாருடன் பேசப்போகின்றார்? அவரின் வருகை எவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நன்மை பயக்கும்? இந்த விஜயமாவது 2009 ஆம் ஆண்டு விஜயத்தைப் போலன்றி மக்களுக்கு விடிவு கிட்டுமா? போன்ற விடயங்களே இவ்வாரம் மக்கள் மத்தியில் உலா வந்துகொண்டிருக்கின்றன.
இலங்கையின் மோதல் விவகாரம் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் அரசியல் தீர்வு போன்ற விடயங்களில் மிகவும் நெருங்கிய நிறுவனமாக உலக பலம் வாய்ந்த அமைப்பாக ஐக்கிய நாடுகள் சபை திகழ்கின்றது. எனவே அவ்வாறு மிகப்பெரிய நிறுவனமான ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் இலங்கைக்கு விஜயம் செய்கின்றார் என்பது இலகுவான விடயமல்ல.
எவ்வாறெனினும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இந்த வருடத்துடன் பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார். எனவே ஐ.நா. செயலாளர் நாயகம் என்ற ரீதியில் அவரின் இறுதி விஜயமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
எதிர்வரும் 31 ஆம் திகதியிலிருந்து செப்டெம்பர் மாதம் 3 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் உள்ளிட்டோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் . அத்துடன் காலிக்கும் யாழ்ப்பாணத்துக்கும் விஜயம் செய்து சுனாமி அழிவு மீளமைப்பு மற்றும் யுத்த பாதிப்பு குறித்து ஆராயவுள்ளார்.
குறிப்பாக அரசாங்கம் மற்றும் எதிர்த்தரப்புக்களுடனான பேச்சுவார்த்தைகளின்போது நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் செயற்பாடுகள் ஜெனிவா பிரேரணை அமுலாக்கம் மற்றும் அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோருடனான கலந்துயைாடல்களின்போது ஜெனிவா பிரேரணையின் அமுலாக்கம் விசாரணை பொறிமுறையின் முன்னேற்றம் என்பன குறித்து ஆராயப்படும். எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 71 ஆவது கூட்டத் தொடரிலும் ஜனாதிபதியும் ஐ.நா. செயலர் பான் கீ மூனும் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளனர்.
இதேவேளை எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்மந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் யாழ்ப்பாணத்திலேயே சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். இச் சந்திப்பின்போது பொறுப்புக்கூறல் பொறிமுறை தொடர்பில் ஆராயப்படும்.
அத்தடன் தமிழ் பேசும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் விசாரணை பொறிமுறையில் சர்வதேசத்தின் பங்களிப்பு அமையவேண்டியதன் அவசியம் என்பன குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பான் கீ மூனுக்கு விளக்கமளிக்கவுள்ளது.
ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் கடந்த 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததுடன் சில தினங்களில் இலங்கைக்கு விஜயம் செய்து நிலைமைகளை அவதானித்திருந்தார். அதன் பின்னர் 2009 ஆம் ஆண்டு இலங்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் பிரேரணை ஒன்றை கொண்டு வந்து நிறைவேற்றியிருந்தது.
ஆனால் இம்முறை பான்கீமூனின் விஜயமானது 2009 ஆம் ஆண்டு விஜயத்தை போன்று அமைந்துவிடக்கூடாது. 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்து சில தினங்களில் பான் கீ மூன் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். கொழும்பு வந்தடைந்த அவர் நேரடியாக வட பகுதிக்கு சென்று யுத்த அழிவுகளை பார்வையிட்டிருந்தார்.
அதன் பின்னர் பான் கீ மூன் இலங்கையிலிருந்து செல்வதற்கு முன்பாக அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுடன் இணைந்து கூட்டறிக்கையொன்றை விடுத்திருந்தார். அந்தக் கூட்டறிக்கையில் யுத்தத்தின் பின்னரான முக்கிய நிலைமைகள் தொடர்பில் விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.
குறிப்பாக யுத்த காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் நம்பகரமான பொறுப்புக்கூறல் பொறிமுறை முன்னெடுக்கப்பட வேண்டும், பொது மக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும், இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் விரைவாக மீள்குடியேற்றப்பட வேண்டும், தமிழ் பேசும் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும், நல்லிணக்க செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் போன்ற முக்கிய விடயங்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூனும் வெளியிட்ட ஒன்றிணைந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பான் கீ மூன் இலங்கைக்கு வந்து சென்று ஏழு வருடங்கள் கடந்து விட்ட நிலையில் ஏதாவது நடந்ததா ?
ஒன்றும் நடக்கவில்லை. பொறுப்புக்கூறல் முன்னெடுக்கப்படவும் இல்லை, அரசியல் தீர்வு காணப்படவும் இல்லை, எதுவும் நடக்கவில்லை. மாறாக யுத்த வடுக்கள், காயங்களும் பிரச்சினைகளும் நெருக்கடிகளும் அவ்வாறே தொடர்கின்றன. காணிகள் விடுவிக்கப்படுவதாக கூறப்பட்டபோதிலும் இதுவரை முழுமையாக மக்களின் காணிகள் விடுவிக்கப்படவில்லை.
எனவே கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் இலங்கை விஜயத்தினால் இதுவரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த பயனும் கிடைக்கவில்லை என்பதே யதார்த்தமாகும். ஆனால் ஒரு நன்மை கிடைத்தது என்பதனை ஏற்றுக்கொள்ளவேண்டும். அதாவது 2009 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் விஜயத்தின் ஊடாக இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகள் குறிப்பிடத்தக்களவு சர்வதேச அவதானத்தைப் பெற்றிருந்தன.
எனவே ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் இம்முறை இலங்கை விஜயமானது 2009 ஆம் ஆண்டு விஜயம் போன்று அமைந்து விடக்கூடாது. இம்முறையாவது அவரின் விஜத்தினூடாக பாதிக்கப்பட்ட மக்களின வடுக்கள் ஆறுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்க வேண்டும்.
குறிப்பாக பான் கீ மூனின் இலங்கை விஜயத்தின் பின்னர் 2009 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கையானது விசேட பிரேரணையொன்றை கொண்டு வந்ததது. அந்த பிரேரணைக்கு மனித உரிமைப் பேரவையில் 29 வாக்குகள் ஆதரவாக கிடைத்தன. 8 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன.
எவ்வாறெனினும் 47 உறுப்பு நாடுகளை கொண்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை கொண்டு வந்த பிரேரணை வெற்றி பெற்றது. அந்த பிரேரணையில் யுத்தத்திற்கு பின்னரான இலங்கையின் நிலைமை தொடர்பில் பல்வேறு விடயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.
ஆனால் அந்த பிரேரணையில் குறிப்பிட்டிருந்த விடயங்கள் கூட உரிய முறையில் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை. அதன் பின்னர் 2012, 2013, 2104 ஆம் ஆண்டுகளில் இலங்கைக்கு எதிராக மேற்குலக நாடுகளினால் பிரேரணைகள் கொண்டுவரப்பட்டன. அவற்றில் யுத்தத்துக்குப் பின்னரான இலங்கையின் நிலைமை குறித்து பல்வேறு விடயங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால் எதுவும் நடக்கவில்லை.
எவ்வாறெனினும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை பொறுத்தவரையில் எந்தவொரு பிரச்சினையும் இதுவரை தீர்க்கப்படாத நிலைமையே தொடர்கிறது.
குறிப்பாக நல்லிணக்க முயற்சிகள் ஏழு வருடங்கள் கடந்த நிலையிலும் இதுவரை வெற்றியடையவில்லை. யுத்த காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் என்பவற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை நீதி வழங்குவதற்கான பொறுப்புக்கூறல் தயாரிக்கப்படவில்லை.
யுத்தகாலத்தில் அபகரிக்கப்பட்ட பொது மக்களின் காணிகள் இதுவரை மீள் வழங்கப்படவில்லை. புதிய அரசாங்கம் காணிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளபோதிலும் இதுவரை அந்த மக்களின் காணிகள் மீள் வழங்காத பிரச்சினை தொடர்ந்து கொண்டு இருக்கின்றது.
அதுமட்டுமன்றி யுத்தகாலத்தில் காணாமல்போனவர்கள் தொடர்பில் இதுவரை எந்தவொரு தீர்வும் காணப்படாமல் இருக்கின்றது. காணாமல்போனவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மை இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. காணாமல்போனவர்களின் உறவினர்கள் பல்வேறு துன்ப துயரங்களுடன் வாழ்க்கை நடத்திக் கொண்டு இருக்கின்றனர்.
இது இவ்வாறிருக்க தமிழ் பேசும் மக்கள் நீண்டகாலமாக போராடி வருகின்ற அரசியல் தீர்வு இதுவரை வழங்கப்படவில்லை. ஒவ்வொரு முறையும் அரசியல் தீர்வு என்ற விடயம் தொடர்பில் பேசப்பட்டு வருகின்ற போதிலும் தீர்வானது எட்டாக்கனியாகவே இருக்கின்றது. புதிய அரசாங்கத்தினால் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்ற நிலையில் அதனூடாக அரசியல் தீர்வு எவ்வாறு உள்ளடக்கப்படும் என்று இதுவரை தெ ளிவற்ற தன்மை காணப்படுகின்றது.
மீள்குடியேற்ற செயற்பாடுகளை பொறுத்தவரையும் இதுவரை முழுமையடையாத நிலையே தொடர்கின்றது. இன்னும் 31 க்கும் மேற்பட்ட நலன்புரி முகாம்களில் மக்கள் வடக்கில் தங்கியுள்ளனர். அவர்களை அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றவேண்டிய தேவை காணப்படுகின்றது.
அது மட்டுமன்றி யுத்தத்தின் பின்னர் யுத்தம் நடைபெற்ற பிரதேசங்களில் மக்களின் வாழ்வாதாரம் குறித்து பாரியளவில் கவனம் செலுத்தவேண்டிய தேவையும் இதுவரை முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. யுத்தத்தினால் கணவனை இழந்த பல பெண்கள் தமது குடும்பத்தை கொண்டு நடத்துவதில் பொருளாதார ரீதியில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.
இவ்வாறு யுத்தம் முடிவடைந்த 2009 ஆம் ஆண்டிலிருந்து கடந்த ஏழு வருடங்களாக பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகள் எதுவும் தீர்க்கப்படவில்லை. புதிதாக ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஆர்வம் காட்டிவருகின்றமையை மறுக்க முடியாது.
ஆனால் புதிய நல்லாட்சி அரசாங்கம் ஆர்வத்தை வெ ளிக்காட்டினாலும் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகள் அவ்வாறே காணப்படுகின்றன. இவ்வாறன ஒரு தீர்க்கமான மற்றும் முக்கியத்துவம் மிக்க கால கட்டத்திலேயே ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கை வருகிறார்.
அதன்படி இப்போது ஆராயப்பட வேண்டிய விடயம் என்னவெனின் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் இந்த விஜயமாவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு விடிவை தருமா ? பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்குமா ? அல்லது 2009 ஆம் ஆண்டில் நடைபெற்றதைப்போன்றே இம்முறையும் பான் கீ மூனின் இலங்கை விஜயமானது வெறுமனே பெயரளவில் விஜயமாக மட்டும் அமைந்துவிடுமா?
இந்தக் கேள்விகளுக்கு பதில் தெரியவில்லை. காரணம் பான் கீ மூனின் இலங்கை விஜயம் தமிழ் பேசும் மற்றும் பாதிக்கப்பட்டமக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் எவ்வாறு தாக்கம் செலுத்தும் என்று கூற முடியாது. 2009 ஆம் ஆண்டு ஒரு அனுபவம் இருக்கின்றது. ஆனால் அப்போது காணப்பட்டதைவிட இப்போது அரசியல் சூழல் மாறிவிட்டது. அரசாங்கம் மாறிவிட்டது. நல்லிணக்கம் மீது ஆர்வம் கொண்ட இருவர் தற்போது நாட்டின் உயர்மட்ட அதிகாரத்தில் இருக்கின்றனர்.
அது மட்டுமன்றி தமிழ் மக்களின் பிரச்சினையானது சர்வதேசம் வரை சென்றுள்ளதுடன் சர்வதேச அவதானம் பாரியளவில் செலுத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றது. பான் கீ மூனை பொறுத்தவரை பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் விடயத்தில் அழுத்தம் பிரயோகிக்கவேண்டும்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தையின்போது தமிழ் பேசும் மக்களின் தற்போதைய உண்மையான யதார்த்த நிலையை பான் கீ மூன் புரிந்துகொள்ள முயற்சிக்கவேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்துக்கு உரிய விளக்கத்தை அளிக்க முன்வரவேண்டும்.
இம்முறையாவது ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் இலங்கை விஜயமானது பாதிக்கப்பட்ட மக்களின் விடயத்தில் விமோசனமாக அமையவேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும். குறிப்பாக கடந்த வருடம் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் அமுலாக்கம் தொடர்பில் பான் கீ மூன் ஆராய்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. எதிர்பார்ப்பு நிறைவேறுமா?
- ரொபட் அன்டனி