Breaking News

விச ஊசி விவகாரம்: சர்வதேச விசாரணையை நிராகரித்தார் மனோ கணேசன்

ஸ்ரீலங்கா இராணுவத்தின் புனர்வாழ்வு முகாம்களில் வைத்து முன்னாள் போராளிகள் மீது விச ஊசி ஏற்றப்பட்டதாகக் கூறப்படும் சம்பவங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் நடாத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் நல்லிணக்க அமைச்சர் மனோ கணேசன் நிராகரித்துள்ளார்.


எதற்கு எடுத்தாலும் சர்வதேச சமூகத்தை நாடும் பழக்கத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அமைச்சர் மனோகணேசன், முதலில் விச ஊசி ஏற்றப்பட்டதால் மர்மமான முறையில் உயிரிழந்ததாகக் கூறப்படும் முன்னாள் போராளிகளின் பெயர் விபரங்கள் அடங்கிய பட்டியலை கையளிக்குமாறு வட மாகாண சபையிடம் கோரியுள்ளார்.

“முன்னாள் போராளிகளை பரிசோதனைக்கு உட்படுத்துவதில் எந்தத் தவறையும் நான் காணவில்லை. அது நல்லது. எமது நாட்டிலுள்ள குறிப்பாக வட பகுதியிலுள்ள தமிழ் மருத்துவர்களையே பயன்படுத்திக்கொள்ளுமாறு எமது சுகாதார அமைச்சரே கூறியிருந்தார். ஆனால் எதற்கு எடுத்தாலும் சர்வதேசத்தை நாடும் ஒரு கூடாத பழக்கம் எம்மவர்கள் மத்தியில் இருக்கின்றது. இதனை நான் முற்றாக எதிர்க்கின்றேன்.

கடந்த காலங்களில் அதற்கான காரணங்கள் இருந்தன. உள்நாட்டிலுள்ள பொறிமுறைகள் தொடர்பிலான நம்பிக்கையீனங்கள் காணப்பட்டன. ஆனால் தற்போதைய எமது ஆட்சியினால் குறைபாடுகள் அனைத்தும் நிவர்த்திசெய்யப்பட்டு நம்பிக்கை கட்டியெழுப்பப்பட்டிருக்கின்றது. 

ஆனால் இதிலுள்ள பிரச்சனை என்னவென்றால் உள்நாட்டு மருத்துவர்களிடம் பரிசோதனை நடாத்துவதிலோ, அல்லது வெளிநாடுகளில்உள்ள மருத்துவர்களிடம் பரிசோதனை செய்வது அல்ல இந்த இடத்தில் இருக்கும் பிரச்சனை. முதலில் வசி ஊசி காரணமாக உயிரிழந்துள்ளதாகக் கூறும் முன்னாள் போராளிகளின் பெயர் விபரங்கள் அடங்கிய பட்டியலை அரசாங்கத்திற்க அவர்கள் வழங்க வேண்டும். இதனை பெற்றுத்தருமாறு வட மாகாண முதலமைச்சரிடம் நேரடியாகவே கோரியுள்ளேன் – என்றார்.

தென்னிலங்கையின் காலி – போபே போத்தல பிரதேசச் செயலகத்தில் இடம்பெற்ற மொழிக்கொள்கை மற்றும் நல்லிணக்கம் தொடர்பிலான செயலமர்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் நல்லணக்க அமைச்சர் மனோ கணேசன் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார்.

இதன்போது விஷ ஊசி ஏற்றப்பட்டுள்ளதாக கூறப்படும் முன்னாள் போராளிகளை யாழ்ப்பாணத்திற்கு அமெரிக்க வான்படை மருத்துவர்களிடம் பரிசோதனைக்கு உட்படுத்தவுள்ளதாக வட மாகாண சபை முதலமைச்சர் தலைமையில் எடுக்கப்பட்ட தீர்மானம் குறித்தும் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கிடையில் இந்த பிரச்சனை தொடர்பில் பிளவுகள் இருப்பதாகக் சுட்டிக்காட்டினார்.

“தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டதாக நாட்டில் இன்று பெரிதாகப் பேசப்பட்டு வருகின்றது. யுத்தத்தின் பின்னரும், அல்லது யுத்தத்தின்போதும் அரச படையினரிடம் சரணடைந்த முன்னாள் போராளிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே சில பகுதிகளில் சில முன்னாள் போராளிகள் மரணமடைந்து வருவதாக கூறப்படுகின்றது. இதுதொடர்பாக வடமாகாண சபையில் தீர்மானமொன்றும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் நான் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தேன். இந்த விஜயத்தில் என்னுடன் வடமாகாண முதலமைச்சரும் இணைந்திருந்தார். அமெரிக்க உலங்கு விமானமொன்றில் பயணித்த எம்முடன் அமெரிக்கா தூதுவரும் இணைந்திருந்தார். வடக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாயிற்று. ஆனாலும் மரணமடைந்த முன்னாள் போராளிகளின் பெயர் விபரப் பட்டியலை தருமாறு வடக்கு முதலமைச்சரிடம் நான் கேட்டுக்கொண்டேன். 

103 அல்லது 104 பேர் இவ்வாறு மரணமடைந்திருப்பதாக கூறப்படுகின்ற சந்தர்ப்பத்தில் வடமாகாண சபையில் அமைச்சர் டெனீஸ்வரன், இவ்வாறான சம்பவம் இடம்பெறவில்லை என்று மாற்றுக்கருத்தை கூறியிருக்கிறார். இவ்வாறு சந்தேகப்படுதற்கு ஒன்றும் இடம்பெரவில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன” – என்று தெரிவித்தார்.