Breaking News

யாழில் மீண்டும் தலைதூக்கும் வாள்வெட்டு : ஒருவர் உயிரிழப்பு



நீதிமன்ற நடவடிக்கைகளால் யாழில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டிருந்த வாள்வெட்டுச் சம்பவங்கள், மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

நேற்று (புதன்கிழமை) யாழ் சங்குவேலி வடக்கு பிரதேசத்தைச் சேர்ந்த சிவகுமார் பிரணவன் (வயது – 35) என்பவர் வாள்வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

கொக்குவில் பகுதியைச் சேர்ந்த சன்னா என்று அழைக்கப்படும் பிரபல தாதா ஒருவர், முன்பகை காரணமாக இக் கொலையை செய்துள்ளதாக உயிரிழந்தவரின் உறவினர்கள் குறிப்பிடுகின்றனர். குறித்த நபர் நேற்று இரவு சிவகுமார் பிரணவனின் வீட்டிற்குள் புகுந்து சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளார். படுகாயமடைந்த அவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சன்னா என்றழைக்கப்படும் சந்தேகநபர், யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மீதான வாள்வெட்டு சம்பவங்கள் உள்ளிட்ட பல தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்றும் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர் வெளிநாட்டில் தலைமறைவாக வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்ட நிலையிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தப்பிச் சென்ற சந்தேகநபர் கிளிநொச்சியில் தலைமறைவாக உள்ளார் என தெரிவிக்கப்படும் நிலையில் பொலிஸார் தீவிர தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர்.