Breaking News

பரவிப்பஞ்சான் காணிகள் விடுவிக்கப்படும - சம்பந்தன் நம்பிக்கை



கிளிநொச்சி – பரவிப்பாஞ்சானிலுள்ள 35 குடும்பங்களுக்கு சொந்தமான 13 ஏக்கர் காணி, 2 வாரங்களுக்குள் விடுவிக்கப்படும் என பாதுகாப்பு செயலாளர் தனக்கு வாக்குறுதி அளித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் உறுதியளித்துள்ளார்.

பரவிப்பாஞ்சான் மக்களுடைய காணி விடுவிப்பு தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாரட்சி மற்றும் கிளிநொச்சி அரசாங்க அதிபருடன் கலந்துரையாடியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்கள் கடந்த ஐந்து நாட்களாக தொடர் கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொண்ட நிலையில், அவர்களை இன்று நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இரா. சம்பந்தன் இவ்வாறு குறிப்பிட்டார்.

பாதுகாப்பு செயலாளரின் வாக்குறுதியை மக்களுக்கு தெரிவித்த பின்னர், மக்கள் பாதுகாப்பு செயலாளரையும் தன்னையும் நம்பி போராட்டத்தை கைவிடுவதாகக் கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.

பாதுகாப்பு செயலாளர் வழங்கிய வாக்குறுதி நிச்சயமாக நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் கேட்டுக்கொண்டுள்ளார். 

எனினும் இரண்டு வாரங்களிற்குள் தீர்வு வழங்கப்படாவிட்டால் மீண்டும் போராட்டத்தை தொடரப் போவதாகவும் பரவிப்பாஞ்சான் மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கிளிநொச்சி – பரவிப்பாஞ்சான் பகுதியில் இராணுவத்தினர் வசமிருக்கும் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி காணி உரிமையாளர்கள் கடந்த ஐந்து நாட்களாக இரவு பகலாக தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பரவிப்பாஞ்சான் இராணுவ முகாமிற்கு முன்னால் கடந்த சனிக்கிழமை காலை முதல் ஒன்றுகூடிய மக்கள், இன்றுவரை எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதனிடையே கவனயீா்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டவா்களை புகைப்படம் எடுப்பதற்காகச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு இராணுவத்தினர் அச்சுறுத்தல் விடுத்திருந்தனர்.

இதனையடுத்து, குறித்த ஊடகவியாளர்கள் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்தமை குறிப்பிடத்தக்கது.