அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு என்ன நடக்கப்போகின்றது?
அம்பாந்தோட்டை துறைமுகம்.... சில வருடங்களுக்கு
முன்னைய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்க காலத்தில் அதிகம் பேசப்பட்ட துறைமுகமாகும். நிலத்தில் கடல் நீரை நிரப்பி நிர்மாணிக்கப்பட்ட இந்த துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டபோது அதிகம் பேசப் பட்டது. சீன அரசாங்கத்தின் நிதி உதவியுடனேயே இந்த துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டது.
இலங்கையின் கேந்திர அமைவிடத்துக்கு இந்தத் துறைமுகம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் நாட்டை பொருளாதார ரீதியில் கட்டியெழுப்புவதில் இந்த துறைமுகம் பாரிய பங்களிப்பை செலுத்தும் என்றும் கூறப்
பட்டது.
ஆனால்,சுமார் நான்கு வருடங்களில் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. அதாவது குறித்த துறைமுகத்தை பராமரிக்கும் செலவைக்கூட பெற முடியாத நிலைமை இந்த துறைமுகத்தில் காணப்படுவதாக புதிய நல்லாட்சி அரசாங்கம் தெரிவித்தது.
அதாவது அம்பாந்தோட்டை துறைமுகம் அமைந்துள்ள பிரதேசத்திலிருந்து சில மைல் கள் தூரத்திலேயே சர்வதேச கப்பல் மார்க் கம் அமைந்துள்ளது. தினம் நூற்றுக்கணக்கான கப்பல்கள் இந்த சர்வதேச மார்க்கத்தில் பயணிக்கின்றன.
எனவே இந்த கப்பல்களுக்கு எண்ணெய் நிரப்பும் மத்திய நிலையமாக அம்பாந்தோட்டை துறைமுகத்தை உருவாக்கவேண்டும் என்பதே இந்த துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டபோது பலராலும் வலியுறுத்தப்பட்ட விடயமாக அமைந்திருந்தது.
ஆனால் தற்போதுவரை அம்பாந்தோட்டை துறைமுகம் அவ்வாறு சர்வதேச கப்பல்களுக்கு எண்ணெய் நிரப்பும் கேந்திர நிலையமாக மாற்றப்படவில்லை. இவ்வாறு செய்யவேண்டுமானால் இந்த துறைமுகத்தில் எண்ணெய் தாங்கிகளை நிறுவவேண்டியது அவசியமாகும். இதற்கான செலவும் மிக அதிகமாகும்.
இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் அம்பாந்தோட்டை துறைமுகத்தை வைத்துக்கொண்டு என்ன செய்யப்போகின்றது? தற்போது எழுகின்ற பிரதான விடயமாகும்.
அதாவது எவ்வாறு இலாபம் ஈட்டும் துறைமுகமாக இந்த அம்பாந்தோட்டை துறைமுகத்தை நல்லாட்சி அரசாங்கம் மாற்றியமைக்கப்போகின்றது என்பதே இங்கு எழுப்பப்படவேண்டிய விடயமாக உள்ளது.
அரசாங்கம் இந்த துறைமுகத்தில் சர்வதேச கப்பல்களுக்கு எண்ணெய் நிரப்பும் தாங்கிகளை நிர்மாணிக்கப்போகின்றதா? அல்லது வேறு ஒரு நாட்டின் நிறுவனம் ஒன்றுக்கு இந்த துறைமுகத்தை இலாபம் ஈட்டு வதாக மாற்றியமைக்கும் பொறுப்பை வழங்கப்போகின்றதா? போன்ற விடயங்களே தற்போது ஆராயப்படவேண்டியவையாக காணப்படுகின்றன.
இது தொடர்பில் கடந்தவாரம் அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ண இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். அதாவது ""அம்பாந்தோட்டை துறைமுகத்தை இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றியமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் அம்பாந்தோட்டை துறைமுகத்தை இலாபம் ஈட்டும் துறைமுகமாக மாற்றியமைக்க சீன நிறுவனமொன்றிடம் வழங்கவுள்ளோம். அவர்கள் அதில் எண்ணெய் பங்கர்களை நிறுவுவார்கள். அதன்பின்னர் சர்வதேச கப்பல்களுக்கு எண்ணெய் நிரப்பும் நிலையமான இந்த அம்பாந்தோட்டை துறைமுக நிலையம் இயங்கும்.
கடந்த அரசாங்கம் இதனை நிர்மாணிக்கும் போது நாங்கள் யாதார்த்தத்தை எடுத்துக் கூறினோம். ஆனால் அவர்கள் அதனை உணரவில்லை. தற்போது அம்பாந்தோட்டை துறைமுகத்தை பராமரிக்கும் செலவைக்கூட எம்மால் பெறமுடியாமல் இருக்கின்றது. எனவே தான் நாம் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனமொன்றிற்கு வழங்கப் போகின்றோம். எம்மால் இதனை செய்ய முடியாது. உதாரணமாக எண்ணெய் பங்கர்களை அமைக்கும் சக்தி எம்மிடம் இல்லை. எனவே இது தொடர்பில் திட்டமிட்டு சீன நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றோம்"" என்று அமைச்சர் ராஜித்த சேனாரட்ன குறிப்பிட்டிருந்தார்.
அந்தவகையில் நல்லாட்சி அரசாங்கமானது அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனம் ஒன்றிடம் வழங்கி அதனை சர்வதேச கப்பல்களுக்கு எண்ணெய் நிரப்பும் கேந்திர நிலையமாக மாற்றியமைக்க திட்டமிட்டுள்ளமை தெளிவாகின்றது. காரணம் தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதான கட்சியான ஐக்கிய தேசிய கட்சி எதிர்க்கட்சியில் இருக்கும்போதே அம்பாந்தோட்டை துறை முகம் நிர்மாணிக்கப்பட்டது.
அப்போது ஐக்கிய தேசிய கட்சி கடும் விமர்சனத்தை முன்வைத்திருந்தது. அதாவது நாட்டை அபிவிருத்தி செய்வதிலோ அல்லது புதிய துறைமுகத்தை அமைப்பதிலோ தவறில்லை என்றும் எனினும் திட்டமிட்ட ரீதியில் நுட்பமான முறையில் அபிவிருத்தி திட்டங்கள் முன்வைக்கப்படவேண்டும் என்ற விடயத்தையே ஐக்கிய தேசிய கட்சி அப்போது வெளிப்படுத்தியிருந்தது.
அத்துடன் அபிவிருத்தி திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டால் அதன் ஊடாக பொருளாதாரம் பலப்படுத்தப்படவேண்டும் என்பதுடன் புதிய தொழில்வாய்ப்புக்கள் உருவாக்கப்படவேண்டும். அதனைவிடுத்து வெறுமனே அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து நிர்மாணங்களை மேற்கொள்வதில் அர்த்தமில்லை என்பதே ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கையாக இருந்தது.
இந்நிலையில் இது தொடர்பில் பொருளாதாரத்துறை சிரேஷ்ட ஊடகவியலாளர் சிஹார் அனீஸ் தனது அவதானிப்பை வெளிப்படுத்துகையில் அரசாங்கம் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைத்து அதனை இலாபம் ஈட்டும் துறைமுகமாக மாற்றியமைக்க நடவடிக்கை எடுத்துள்ளமை உறுதியாகியுள்ளது. சீனாவுக்கு ஒப்படைப்பதற்கு அரசாங்கம் தயாராக இருக்கின்றது. இதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது இடம்பெற்றுவருகின்றன. எனினும் இறுதியில் என்ன நடக்கும் என்று தெரியவில்லை. இந்த இடத்தில் நாம் கவனம் செலுத்தவேண்டிய முக்கிய விடயம் ஒன்று உள்ளது.
அதாவது பில்லியன் கணக்கில் முதலீடு செய்து நிர் மாணித்த ஒரு திட்டத்தை வெறுமனே வைத்துக்கொண்டிருப்பதா? அல்லது அதனை இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றியமைப் பதா ? என்ற விடயம் சிந்திக்கப்படவேண்டும். எனவே இங்கு தீர்க்கமான தீர்மானம் எடுக்கப்படவேண்டும் என்றார்.
எவ்வாறெனினும் தற்போதைய பொரு ளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் அரசாங்கம் பல்வேறு முக்கியத்துவமிக்க தீர்மானங் களை எடுக்கவேண்டியது அவசியமாகும். குறிப்பாக பாரிய நிதி முதலீட்டுடன் நிர்மாணிக் கப்பட்டுள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்தின் ஊடாக நாட்டின் பொருளாதாரம் மேம்படவேண்டும் என்பதுடன் புதிய தொழில்வாய்ப்புக்களை உருவாக்கவேண் டியது அவசியமாகும்.
ரொ.அன்ரனி