புலம்பெயர் தமிழ் உறவுகளுக்கு ஓர் அன்பு மடல்
புலம்பெயர் தமிழ் உறவுகளுக்கு அன்பு
வணக்கம். புலம்பெயர்ந்தவர்கள் எங்கள் மண்ணை மறந்து விடுவார்களோ! என்ற ஏக்கம் இப்போது மெல்லத் தணிந்து கொள்கிறது.
நல்லூர்க் கந்தனின் மஹோற்சவத்தில் உங்களைக் காணும்போது நெஞ்சம் மகிழ்ந்து கொள்கிறோம்.
தேசம் கடந்து வாழ்ந்தாலும் வேர் விட்ட நிலத்தை மறக்க முடியுமா? என்பதுபோல புலம்பெயர் உறவுகள் தத்தம் குடும்பத்தோடு தாயகம் வந்திருப்பதும் நல்லூர்க் கந்தனின் மஹோற்சவத்தில் கலந்து கொள்வதும் ஆறுதலைத் தருவதாகும்.
அதேநேரம் இக் கடிதம் எழுத முனைந்ததற்கு இரண்டு காரணங்கள் உண்டு. அதில் ஒன்று; இரட்டைப் பிரஜாவுரிமை என்ற விடயம் சம்பந்தமானது.
புலம்பெயர்ந்திருக்கக்கூடிய தமிழ் உறவுகளே! நீங்கள் அனைவரும் உங்களின் பிரஜாவுரிமையை தாயகத்தில் பதிவு செய்து கொள்ளுங்கள். இரட்டைப் பிரஜாவுரிமை என்ற நிபந்தனைகளின் கீழ் நீங்கள் இந்த நாட்டின் பிரஜாவுரிமையைப் பதிவு செய்வதன் மூலம் எங்கள் இனத்தின் சனத்தொகை அதிகரிப்பதுடன், வாக்காளர் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொள்ளும்.
அதேசமயம் புலம்பெயர் உறவுகளின் கைகளிலேயே எங்கள் தாயகத்தின் முதலீட்டு முயற்சிகள் இருப்பதால் உங்களின் முதலீடுகளை தாயகத்தில் மேற்கொள்வதற்கும் உங்களுக்குரிய சொத்துக்களைப் பாதுகாப்பதற்கும் இரட்டைப் பிரஜாவுரிமையின் கீழ் பதிவு செய்வது அவசியமானதாகும்.
இன்றைக்கு எங்களிடம் இருக்கக்கூடிய பெரிய பிரச்சினை எங்கள் இனத்தின் சனத்தொகை வீழ்ச்சியாகும்.
நாட்டில் நடந்த யுத்தத்திற்கு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்களை காவு கொடுத்த கொடுமை ஒரு புறம்.
யுத்தத்தின் நெட்டூரத்தால் பிறந்த ஊரில் வாழ முடியாமல் வேரறுந்து புலம்பெயர்ந்த உறவுகள் மறுபுறமாக எங்கள் தமிழினத்தின் மக்கள் தொகையை சிறுபான்மையாகிவிட்டது.
இதற்கு மேலாக தாயகத்தில் வாழ்கின்றவர்களும் ஒரு குழந்தை, இரு குழந்தை போதும் என்று எல்லைப்படுத்தி விட, எங்கள் பின்னின்ற முஸ்லிம் சகோதரர்கள் இன்னும் ஒரு சில வருடங்களில் எங் களை முந்தி சிங்கள மக்களை நெருங்கும் அளவுக்கு வந்துவிடுவர்.
ஆகையால் அன்புக்குரிய புலம்பெயர் உறவுகளே! இரட்டைப் பிரஜாவுரிமையின் கீழ் உங்களை இந்த நாட்டின் பிரஜைகளாகப் பதிவு செய்வதானது எங்கள் இனத்தின் இருப்பை உறுதி செய்வதற்கு பேருதவியாக அமையும்.
இவை யாவற்றுக்கும் மேலாக, புலம்பெயர்ந்திருக்கும் நீங்கள் இங்கு பிரஜாவுரிமைப் பதிவு செய் வதனூடாக உங்கள் பிள்ளைகளுக்கும் எங்களுக்குமான உறவும் பலப்பட்டுக் கொள்ளும்.
தாயகத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் உங்கள் பிள்ளைகள் நீங்கள் வாழும் புலம்பெயர் நாட்டில் பிறந்தவர்கள். எனவே அவர்களை தாயகத்துடன் இணைத்துவிடத் தவறினால் அவர்களுக்கும் எங்களுக்குமான நெருக்கம்-உறவு என அனைத்தும் வேரறுந்து போகும்.
ஆகையால் உங்கள் பிள்ளைகளின் தொடர்பை தாயகத்துடன் நெருக்கமாக்கி விடுவது உங்களின் கடமையாகும்.
இதைச் செய்யும் அதேவேளை உங்களிடம் கேட்கும் இரண்டாவது உதவி, உங்கள் பிள்ளைகளுக்கு எம் தாய்மொழியாம் தமிழைப் போதித்து விடுங்கள்.
அது தமிழனை-தமிழை உலகம் எங்கும் வாழவைக்கும். தாயகத்தையும் உலகத்தையும் ஒன்றிணைக்கும். இதைச் செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் இக் கடிதத்தை நிறைவுபடுத்துகின்றேன்.