எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் (2ம் இணைப்பு)
கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதியின் மகனும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸ எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில் நாமல் ராஜபக்ஸ சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டதையடுத்து விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட நாமல் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்
நிதிமோசடி தொடர்பில் கைதுசெய்யப்பட்ட அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இன்று பிற்பகல் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
இன்று காலை நிதி மோசடி தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னரே, நாமல் கைதுசெய்யப்பட்டார். நிதி மோசடி தொடர்பில், இதற்கு முன்னரும் நாமலிடம் நிதிமோசடி தடுப்புப் பிரிவினர் மற்றும் பாரிய நிதி மோசடி குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு என்பன வாக்குமூலங்களை பதிவுசெய்திருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
இதேவேளை, நிதிமோசடி தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடமும், இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான வாகனங்களுக்கு, தீர்வையற்ற முறையில் மேலதிக உதிரிப்பாதங்களை இறக்குமதி செய்த குற்றச்சாட்டிற்காக நாடாளுமன்ற குமார வெல்கமவிடமும், தற்போது நிதி மோசடி தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாரை கைதுசெய்ய வேண்டுமென நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சர்களே தீர்மானிப்பதாகவும், சட்டத்தை நல்லாட்சி அரசாங்கம் தமது கையில் எடுத்து செயற்படுவதாகவும், நாமல் இன்று காலை தமது முகப்புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார். எவ்வாறெனினும் மக்கள் அரசாங்கமொன்றை அமைப்பதற்காக, தமது போராட்டத்தை கைவிட மாட்டோம் என அவர் குறித்த செய்தியில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.