Breaking News

கிளஸ்டர் குண்டு விவகாரம்! வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிய பரணகம!

இறுதிக்கட்டப் போரில் கிளஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டது தொடர்பான குற்றச்சாட்டு குறித்து சுதந்திரமான- நடுநிலையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனின் வாய்மூல அறிக்கையில் விடுக்கப்பட்டிருந்த கோரிக்கைக்குப் பதிலளிக்கும் வகையில், காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.


இந்த அறிக்கையில் அவர், தமது ஆணைக்குழு நடத்திய விசாரணைகளில், போரில் கிளஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டமைக்கு நம்பகமான எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.

போரில் கிளஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக தருஸ்மன் குழுவினால் முன்னர் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு ஆதாரம் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும், இந்தவகையான ஆயுதத்தை தாம் பயன்படுத்தவில்லை என்று இலங்கை இராணுவம் மறுப்பு வெளியிட்டதை ஐ.நா. ஏற்றுக் கொண்டதாகவும் அவரது அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

அதைவிட இன்னொரு விடயத்தையும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். 2010ம் ஆண்டு ஓகஸ்ட் முதலாம் திகதி தான், கிளஸ்டர் குண்டுகளைத் தடை செய்யும் உடன்பாடு நடைமுறைக்கு வந்தது என்றும், எனவே, 2009ம் ஆண்டு முடிவுக்கு வந்த போரில் இராணுவத்தினர் கிளஸ்டர் குண்டுகளைப் பயன்படுத்தியிருந்தாலும் கூட அது சட்டவிரோதமானது அல்ல என்று அவர் வாதிட்டிருக்கிறார்.

ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் வாய்மூல அறிக்கைக்குப் பதிலளித்து உரையாற்றியிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இந்தக் குற்றச்சாட்டை முற்றாக நிராகரிக்கவில்லை. விசாரணை நடத்துகிறோம், அவ்வாறு கிளஸ்டர் குண்டுகள் போரில் பயன்படுத்தப்பட்டிருந்தால் அது பாரதூரமான விடயம் என்று தான் குறிப்பிட்டிருந்தார்.

அரசாங்கத்தின் பிரதிநிதியாக – ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கைக்கு பதிலளிக்க வேண்டிய கடப்பாட்டைக் கொண்டிருந்தவர் என்ற வகையில் அவரது அந்தப் பதில் அமைந்திருந்தது.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்க வேண்டிய கடப்பாடு காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகமவுக்கு உள்ளதா? என்பது கேள்விக்குரிய விடயம்.

குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிப்பதற்காக அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட ஒரு சுயாதீன ஆணைக்குழுவின் தலைவருக்கு, இதுபோன்று பதிலளிக்க வேண்டிய கட்டாயம் இல்லை.

அதுவும், இந்த ஆணைக்குழுவின் செயற்பாடுகள் திருப்தியளிக்கும் வகையிலோ, நம்பகமானதாகவோ இல்லை என்பதால் தான், இதன் செயற்பாடுகளை முடிவுக்குக் கொண்டு வரப்படவுள்ளது,

இன்னும் சில நாட்களில் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் முடிவுறுத்தப்படவுள்ள ஒரு சூழலில், ஆணைக்குழுவின் தலைவர் இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்க வேண்டியதில்லை.

இந்தக் குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள, பாதுகாப்பு அமைச்சோ, இராணுவம் அல்லது விமானப்படையோ கூட அதிகாரபூர்வமான அறிப்பை இன்னமும் வெளியிடாத போது, அரசாங்கத்தின் ஒரு அங்கமாக இல்லாத- இந்தக் குற்றச்சாட்டுடன் எவ்வகையிலும் தொடர்புபடாத ஒரு ஆணைக்குழுவின் தலைவர் தன்னிலை விளக்கம் கொடுக்க முனைந்திருப்பது அபத்தமானது.

பரணகம ஆணைக்குழுவின் கடப்பாடு, ஜனாதிபதிக்கு அறிக்கை சமர்ப்பிப்பது மட்டுமே தவிர, வெளிநாடுகளினதோ, ஐ.நா.வினதோ குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிப்பதல்ல.

ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் கடந்த செப்ரெம்பர் மாதம் சமர்ப்பித்த அறிக்கையில், காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் பரணகம ஆணைக்குழுவின் விசாரணைகள் நம்பகமற்றது என்றும், அதனை உடனடியாக கலைக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

அதற்கு ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம, தாம் நியாயமான விசாரணைகளையே முன்னெடுத்திருப்பதாகப் பதில் கொடுத்திருந்தார். அது ஏற்றுக்கொள்ளக் கூடிய விடயமாகவும் இருந்தது.

ஆனால், இப்போது கிளஸ்டர் குண்டு குற்றச்சாட்டு விடயத்தில் மக்ஸ்வெல் பரணகமவின் பதில் அறிக்கை, ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனின் அறிக்கை, பொய்யானது என்று வாதிடும் வகையில் அமைந்திருக்கிறது,

கடந்த செப்ரெம்பரில் தமது ஆணைக்குழு நம்பகமற்றது என்று குற்றம்சாட்டிய, ஐ.நா. மனித உரிமை ஆணையாளருக்குப் பதிலடி கொடுப்பது போலவே, இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது.

அதேவேளை, கிளஸ்டர் குண்டுக் குற்றச்சாட்டு நம்பகமானது அல்ல என்று தமது ஆணைக்குழு கண்டறிந்துள்ளதாகவும் மக்ஸ்வெல் கூறியிருக்கிறார்.

இந்த ஆணைக்குழுவின் விசாரணைகளில் நம்பகமில்லை என்பதால் தான், இந்த விவகாரத்தை கையாளும் தனியான பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டும் என்று, ஐ.நா.வும், சர்வதேச சமூகமும் வலியுறுத்தியிருந்தது.

சர்வதேச நம்பகத்தன்மையைப் பெறாத ஒரு ஆணைக்குழுவின் முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அழுத்தம் கொடுப்பது அல்லது அந்த முடிவே இறுதியானது என்று பிரசாரம் செய்வது கண்ணியமான செயல் அல்ல.

அதைவிட, இறுதிக்கட்டப் போரில் இராணுவம் கிளஸ்டர் குண்டுகளைப் பயன்படுத்தியிருந்தாலும் கூட அது சட்டவிரோதமானதல்ல என்றும் மக்ஸ்வெல் பரணகம கூறியிருக்கிறார்.அதற்கு அவர் கொடுத்திருக்கின்ற விளக்கமும், நகைப்புக்கிடமானது.

கிளஸ்டர் குண்டு குற்றச்சாட்டின் தன்மையை ஆராயாமல், இந்தக் குற்றச்சாட்டில் இருந்து படையினரை விடுவிப்பதிலேயே அவர் குறியாக இருக்கிறார் என்பதை இந்த வாதம் நிரூபிக்கிறது.

2010ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் தான், கிளஸ்டர் குண்டுகளை தடை செய்யும் சர்வதேச பிரகடனம் நடைமுறைக்கு வந்தது என்றும், அதற்கு முன்னர், இதனைப் பயன்படுத்தியிருந்தால், அது சட்டவிரோதமானது அல்ல என்றும் கூறியிருக்கிறார்.

ஆனால், போரில் கிளஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டிருந்தால் அது பாரதூரமான விடயம் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள் சமரவீர ஜெனீவாவில் ஒப்புக்கொண்டிருக்கும் நிலையிலும் கூட, இவர் இப்படிக் கூறியிருப்பது வேடிக்கை.

கிளஸ்டர் குண்டுகளின் பயன்பாட்டைத் தடை செய்யும் பிரகடனம் 2010ஆம் ஆண்டு தான் நடைமுறைக்கு வந்தது. அதில் எந்த சந்தேகமும் இல்லை.

இன்று வரை கிளஸ்டர் குண்டுகளை தடை செய்யும் பிரகடனத்தில் 100 நாடுகள் மற்றும் தரப்புகள் கையெழுத்திட்டிருந்தாலும் இதனை ஒரு தடை செய்யப்பட்ட ஆயுதமாக சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

அமெரிக்கா, இந்தியா, சீனா, ரஷ்யா போன்ற முக்கியமான நாடுகள் இந்த உடன்பாட்டில் கையெழுத்திடவில்லை. இலங்கையும் கூட இதில் ஒப்பமிடவில்லை.

எனவே இப்போது பயன்படுத்தினாலும் கூட இது சட்டவிரோதமானது அல்ல.இந்த உடன்பாட்டை ஏற்றுக் கொண்டு கையெழுத்திட்டிருந்தால் தான், அதனை மீறியதாக இலங்கைக்கு எதிராக சர்வதேச அழுத்தங்களைக் கொடுக்க முடியும். இந்த உடன்பாட்டில் கையெழுத்திடாத ஒரு நாடு என்ற வகையில், இலங்கை மீது அழுத்தங்களைக் கொடுக்க முடியாது.

அதற்காக, இலங்கை கிளஸ்டர் குண்டுகளை பயன்படுத்தலாம் என்று அங்கீகாரம் கொடுக்க முடியாது. இது ஒரு பேரழிவு ஆயுதம் என்பது சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயம்.

அதாவது, பாரிய இராணுவ வாகனத் தொடரணிகள், விமான ஓடுதளங்கள் போன்றவற்றை இலக்கு வைக்கக் கூடிய இந்த பேரழிவு ஆயுதங்களை பொதுமக்கள் மத்தியில் பயன்படுத்தும் போது தான், சர்வதேச சமூகம் கேள்வி எழுப்பும்.

போரில் குண்டுகளை வீசுவது சட்டத்தினால் அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும், பேரழிவை ஏற்படுத்தும் குண்டுகளைப் பயன்படுத்துவது மனிதாபிமானச் செயல்களுக்கு முரணான செயல் தான்.

பொதுமக்களை புலிகள் மனித கேடயங்களாகப் பயன்படுத்தியது ஒரு மீறலாக எவ்வாறு குறிப்பிடப்படுகிறதோ, அதற்கு சற்றேனும், குறைவில்லாத ஒரு குற்றச்செயலாகத் தான் கிளஸ்டர் குண்டு வீச்சுகளும் கருதப்படத்தக்கவை.

மக்கள் செறிவாக இருந்த பிரதேசத்தில் கிளஸ்டர் குண்டுகளை வீசும் போது பேரழிவு ஏற்படும் என்பது அரசாங்கத்துக்கும் படையினருக்கும் தெரியும்.

அதனைத் தெரிந்திருந்தும் கிளஸ்டர் குண்டுகளைப் பயன்படுத்தியிருந்தால், அது ஒரு மனிதப் பேரழிவை ஏற்படுத்தும் குற்றமாகவே கருதப்பட வேண்டும்.

சட்டங்களுக்கு அப்பாற்பட்ட எத்தனையோ மீறல்கள் இருக்கின்றன.வெறும் சட்டங்களினால் மட்டும் தான், மீறல்களை வரையறுக்க முடியும் என்றால், ஏராளமான மனிதாபிமானக் குற்றங்கள் ஒன்றுமில்லாதவையாக்கப்பட்டு விடும்.

கிளஸ்டர் குண்டு விவகாரமும், அப்படித்தான். இது ஒரு சட்டவிரோத செயல் அல்ல. அதற்காக இதனை மனிதாபிமான ரீதியில் போரிடும் செயலாக உலகம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது.

மனிதகுலத்துக்கு அழிவை ஏற்படுத்தும் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன என்பதை நிரூபிப்பதற்கான வாய்ப்புகள் இல்லாத ஒரு சூழலில், இப்படியான செயல்களை நியாயப்படுத்த முனைவது, இந்த ஆணைக்குழுவினது நம்பகத்தன்மைக்கு நிச்சயம் சவாலான விடயம் தான்.

அதனால் தான், பரணகமவின் அறிக்கையை அவரது அதிமேதாவித்தனம் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர விமர்சித்திருக்கிறார்.