நிஷா, மாலினோவ்ஸ்கி இன்று மங்கள சமரவீரவைச் சந்திக்கின்றனர்
சிறிலங்காவுக்கு இன்று பயணம் மேற்கொள்ளவுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் இரண்டு உதவிச்செயலர்கள் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடன் முக்கிய பேச்சுக்களை நடத்தவுள்ளனர்.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச்செயலர் நிஷா பிஸ்வால் இன்று டாக்காவில் இருந்து கொழும்பு வரவுள்ளார். அவருடன் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பிரதிச்செயலர் மான்பிரீத் ஆனந்தும், சிறிலங்கா வரவுள்ளார்.
அதேவேளை, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள், தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச்செயலர் ரொம் மாலினோவ்ஸ்கியும் இன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச்செயலர்களான நிஷா பிஸ்வாலும், ரொம் மாலினோவ்ஸ்கியும் இன்று பிற்பகல் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்துப் பேசவுள்ளனர்.
இதையடுத்து, மாலை 7 மணியளவில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சில் அவர்கள் கூட்டாக செய்தியாளர்களைச் சந்திக்கவுள்ளனர்.