Breaking News

வடக்கில் கோடி செலவில் பிரம்மாண்ட புத்தர்சிலை தேவையா?



யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்கள் இன்னமும் அகதி வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கும் நிலையில் 12 கோடி ரூபா செலவில் பிரம்மாண்டமான புத்தர் சிலை தேவைதானா என வடமாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் கேள்வியெழுப்பியுள்ளார்.

நயினாதீவில் 67அடி உயரமான புத்தர் சிலை அமைக்கப்பட்டு வருகின்றது. இதற்கு தமிழ் மக்கள் பலத்த எதிர்ப்பை வெளிப்படுத்தியும் அதையும் மீறி அரசாங்கத்தின் ஆதரவுடன் மிகவும் தீவிரமாக புத்தர் சிலை அமைக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நயினாதீவில் ஏற்கனவே ஒரு பௌத்த விகாரை இருக்கும் பட்சத்தில் புதிதாக ஒரு சிலை அமைப்பது திட்டமிட்ட வகையில் தமிழ்ப் பிரதேசத்தில் பௌத்தமதத்தை திணிக்கும் செயலெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன ஐக்கியத்தையும் நல்லிணக்கத்தையும் உருவாக்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் முன்னைய அரசு பயணித்த பாதையிலேயே பயணிக்கின்றதெனவும் நல்லாட்சியில் எங்குபார்த்தாலும் புத்தர் சிலைகளே புதிதுபுதிதாக எழுகின்றன எனவும் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தில் திட்டமிட்டு உருவாக்கப்படும் சிங்களக் குடியேற்றத்தின் ஒரு பகுதியே இது எனவும், அரசாங்கம் இந்த விடயத்தில் உடனடியாகத் தலையிட்டு தடுத்து நிறுத்தவேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.