யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் நீதிமன்றில்!
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில், கடந்த சனிக்கிழமை தமிழ் சிங்கள மாணவர்களிற்கி டையிலான இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் டி.சிசீந்திரன் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்ப ட்டுள்ளார்.
கடந்த 16 ஆம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வின் போதே தமிழ், சிங்கள மாணவர்களுக்கிடையில் மோதல் ஏற்பபட்டது. யாழ் பல்கலைக்கழகத்தில் இதுவரை காலமும் இடம்பெற்று வந்த தமிழ் பாரம்பரிய முறைப்படி மேள, தாளங்களுடன் மாணவர்களை வரவேற்க வேண்டும் என்று தமிழ் மாணவர்கள் கூறிய நிலையில், சிங்கள மாணவர்கள் அவர்களின் பாரம்பரிய முறையான கண்டிய நடனத்துடன் வரவேற்க நடவடிக்கை எடுத்தனர்.
தமிழ் மாணவர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி சிங்கள மாணவர்கள் கண்டிய நடனக் கலைஞர்களை அழைத்திருந்ததால் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் இறுதியில் கைகலப்பாக மாறியது.
இதனையடுத்து மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற இந்தப் பிரச்சனை தென்பகுதியைச் சேர்ந்த இனவாதத் தரப்பினரால் பூதாகரமாக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தலைமையில் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் மூன்று அமைச்சர்கள் யாழ் பல்கலைக்கழகத்திற்கு நேரடியாக விஜயம் செய்து பிரச்சனையை சுமூகமாக தீர்த்துவைத்துள்ளதாக அறிவித்தனர்.
இதற்கமைய மூடிவைக்கப்பட்டிருந்த யாழ் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடம், வவுனியா வளாகம் மற்றும் கிளிநொச்சி வளாகம் என்பன கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையிலேயே இன்று யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் டி சிசீந்திரனை கோப்பாய் பொலிஸார் இன்றைய தினம் யாழ் மேல் நீதி மன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் முன்னிலையில் அழைக்கப்பட்டு நேற்றைய தினம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சிசீந்திரன், பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையிலேயே இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கின்றார்.
அவர் சார்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகியுள்ளார். அது மாத்திரமன்றி பல்கலைக்கழக பீடாதிபதிகளும் இன்று நீதிமன்றில் கூடியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை நேற்றைய தினமும் பொலிசார் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவரை விசாரணைக்கு அழைத்திருந்த போது, பீடாதிபதிகள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான எம்.ஏ சுமந்திரன் ஆகியோரும் பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருந்ததுடன் வாக்குமூலம் பதிவு செய்த பின்னர் பிணையில் விடுதலை செய்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.