காஷ்மீர் வன்முறை: கொல்லப்பட்டோர் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்தது (காணொளி)
இந்திய நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரில் கடந்த சில நாட்களாக நடந்து வரும் வன்செயல்களில் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்தது 30ஆக அதிகரித்துள்ளது.
ஞாயிறன்று போலிஸ்காரர் ஒருவர் அவர் இருந்த காருடன் ஆற்றுக்குள் தள்ளப்பட்டதில் நீரில் மூழ்கி இறந்தார். அந்த சம்பவத்தை அடுத்து அங்கு வன்செயல்கள் அதிகரிக்கலாம் என்ற அச்சங்கள் நிலவுகின்றன.
ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தைச் சேர்ந்த புர்ஹான் வானி என்ற இளம் தலைவர் வெள்ளியன்று இந்திய ராணுவத்துடன் நடத்திய துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டதை அடுத்து இந்த வன்முறை வெடித்தது.
இந்தியாவும் பாகிஸ்தானும் சொந்தம் கொண்டாடும் காஷ்மீர் பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக நடந்ததிலேயே மிகவும் மோசமான வன்முறையாக இது பார்க்கப்படுகிறது.
இந்தப் பதற்ற நிலையை அடுத்து, அமர்நாத்தில் உள்ள இந்துக் கோயிலுக்கு இந்துக்கள் நடத்தும் புனித யாத்திரை இடை நிறுத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து அந்த யாத்திரையில் கலந்து கொள்ளச் சென்றிருந்த சுமார் 15,000 இந்துக்களின் பயணங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன என்று இந்திய ஊடகங்கள் கூறின.
மனித உரிமைக் குழுக்கள் தற்போதைய நிலவரத்தை, ஒரு அவசர நிலைக்காலம் போல் சித்தரிக்கின்றன.
மருத்துவமனைகள் எங்கும் காயமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்களால் நிரம்பி வழிகின்றன. தொலைபேசி மற்றும் இணைய சேவைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளன.