ஒற்றையாட்சிக்குள் தீர்வு என சம்பந்தன், சுமந்திரன் ஏமாற்று! -கஜேந்திரகுமார் சாடல்
தமிழ் மக்களுக்கு ஒற்றையாட்சிக்குள் உறுதியற்ற தீர்வை பெற்றுத்தரவே தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், அதன் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனும் ஒவ்வொரு நேரம் ஒவ்வொரு கதைகளை கூறி வருவதாக தெரிவித்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இவர்களுடைய ஏமாற்று நாடகங்களில் இருந்து தமிழ் மக்கள் விடுபடா விட்டல் இறுதியில் தமிழ் மக்களே ஏமாற்றத்திற்கு உள்ளாவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனின் கூறியுள்ள ஓற்றையாட்சிக்குள் சமஸ்டி எனும் தீர்வு திட்டம் இந்த வருடத்தின் புதிய கண்டுபிடிப்பு எனவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விமர்சித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பு அண்மைக்காலமாக தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு திட்டம் தொடர்பில் கூறிவரும் கருத்துக்கள் குறித்து நேற்று புதன்கிழமை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் பத்திரிகையாளர் சந்திப்பொன்று இடம்பெற்றது.
இந்த சந்திப்பின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஒற்றையாட்சிக்குள் சமஸ்டி எனும் புதிய சொற்பதத்தை கூறி வருகின்றமை குறித்து ஊடகவியலாளர்கள் கேட்ட போதே அவர் இவ்வாறு சாடினார். அவர் அங்கு மேலும் கூறுகையில், அவரின் புதிய கண்டுபிடிப்பு ஒற்றையாட்சிக்குள் சமஸ்டி என்பது. இது புதிய கண்டுபிடிப்பா பழைய கண்டு பிடிப்பா என்ற விவாதத்திற்கு இடமில்லை.
தமிழ் தேசிய கூட்டமைப்பு தேர்தலின் போது ஒருவாக்குறுதியை அளித்து போட்டியிட்டனர். ஏனைய கட்சிகள் பொய் வாக்குறுதி அளிக்கின்றார்கள் என சொன்னாலும் கூட, தமது மக்களுக்கு சுயநிர்ணய உரிமை என்ற அடிப்படையில் சமஸ்டி தான் தீர்வு என்று ஆணித்தனமாக கூறி வாக்குகளைப் பெற்றார்கள். சுயநிர்ணய உரிமை என்ற அடிப்படையில் சமஸ்டி தீர்வு என்றால், அதில் ஒரு தீர்வு மட்டுமே இருக்கின்றது.
இதற்கு பலவிதமான தீர்வுகளைப் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. சமஸ்டி பல முறைகள் இருக்கின்றன. அவற்றில் எந்த சமஸ்டி என்பது மிக முக்கியமானது. எவ்வளவோ அழிவுகளை சந்தித்த மக்கள், இவர்களது நடவடிக்கைகளால் மீண்டும் மீண்டும் அழிவுகளையும், ஏமாற்றங்களையும் சந்தித்துக்கொண்டிருக்க கூடாது தமிழ் தேசிய கூட்டமைப்பு பேச்சில், சமஸ்டி சுயநிர்ணய உரிமை என்று சொன்னாலும் கூட, வெறுமனவே கோசங்களாக மாத்திரமே அவை உள்ளன.
நடைமுறையில் ஒற்றையாட்சியை தான் இவர்கள் கேட்கப் போகின்றார்கள். கண்முன்னே ஏமாற்றப்பட போகின்றோம். தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கண்டுபிடித்த ஒற்றையாட்சிக்குள் சமஸ்டி என்பதனை ஏன் தேர்தல் காலத்தில் சொல்லவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார். ஓற்றையாட்சிக்குள் சமஸ்டி என்ற விடயத்தினை 40 வருடங்களாக அரசியலில் இருக்கும் அரசியல்வாதிக்கு தெரியாதா, நேற்று அல்லது நேற்று முன்தினம் வந்த விடயம் அல்லவே, ஒஸ்ரியா நேற்று உருவாக்கப்பட்ட நாடா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். ஏன் இதனை தேர்தல் காலத்தில் சொல்லவில்லை என்றும் ஏன் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை மற்றும் சமஸ்டி தீர்வு என ஒரே நேரத்தில் கூறினீர்கள். சுயநிர்ணய உரிமைக்குள் சமஸ்டி என்றால்,
ஒற்றையாட்சிக்குள் சமஸ்டி என்று கதைக்க முடியாது. எமது மக்களை ஒற்றையாட்சிக்குள் முடக்குகின்ற நோக்குடனேயே இது பேசப்பட்டுள்ளது. மக்களின் முகத்திற்கு சொல்லி, அவர்களை ஏமாற்றிக் கொண்டு செல்ல முடியுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு துணிச்சல் வந்துள்ளது. என தமிழ் மக்கள் தமக்கு நேர போகும் ஆபத்தை உணர்ந்து செயற்பட வேண்டும். இல்லையேல் எமது அறுபது வருட போராட்டம் வீணாகி போய்விடும் எனவும் அவர் தெரிவித்தார்.