ஓமந்தையில் பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதில் இழுபறி..!!
பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைப்பதே பொருத்தமானது என்று ஜனநாயக ரீதியாக முடிவெடுக்கப்பட்டு விட்டாலும் சில சுயநலன் சார்ந்த சக்திகள் மேலும் குழப்பங்களையும், இழுபறியையும் உருவாக்கிய வண்ணம் உள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
எதுஎவ்வாறாயினும் பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையிலேயே அமைக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக தாம் இருப்பதாகவும் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையிலா? அல்லது தாண்டிக்குளத்திலா? அமைப்பது என்ற இழுபறி ஏற்பட்டபோது அதற்கு ஜனநாயக ரீதியாக தீர்வு காணப்போவதாகக் கூறி வடமாகாணசபை உறுப்பினர்களையும், வடமாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இணைத்த ஒரு கூட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கூட்டியிருந்தார்.
அந்தக் கூட்டத்தில் இந்த விடயம் விரிவாக ஆராயப்பட்டு ஜனநாயகரீதியில் முடிவை எட்டுவதாகக் கூறி அது முதலமைச்சரின் கையில் ஒப்படைக்கப்பட்டது.
முதலமைச்சரும், சம்பந்தனின் கருத்தினை ஏற்று, மாகாணசபை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்தினைக் கேட்டறிந்தார். இதன் பிரகாரம் ஓமந்தையில் இது அமைவதே பொருத்தமானது என பெரும்பாலானவர்கள் வாக்களித்தனர்.
ஆனால், இதன் பின்னர் நாடாளுமன்றக்குழு கூடி இந்தக் காணிகளைப் பார்வையிடுவதாகவும், ஓமந்தையிலேயே இதனை நிறுவுவதற்கும் முடிவெடுக்கப்பட்டு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா முதலமைச்சரை சந்தித்து இதற்கான முடிவை எடுங்கள் என்றும் கூறியிருந்தார்.
அதேசமயம், தாண்டிக்குளத்தைத் தெரிவு செய்துள்ள அமைச்சர் றிசாத் பதியூதீன், கடந்த 2010ஆம் ஆண்டு ஜுன் மாதம் 15ஆம் வவுனியாவில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அன்றைய வடமாகாண ஆளுநராக இருந்த சந்திரசிறி, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க அதிபர் சாள்ஸ், நகரசபை தவிசாளர், உறுப்பினர்கள், திணைக்கள தலைவர்கள் இணைந்து ஓமந்தையைத் தெரிவு செய்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று எந்த காரணத்திற்காக மத்திய அமைச்சர்கள் பொருளாாதார மத்திய நிலையம் ஓமந்தையில் அமைவதை எதிர்க்கிறார்கள் என்று சிவசக்தி ஆனந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கூட்டமைப்பின் நாடாளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்களுக்கிடையில் தேவையற்ற முரண்பாடுகளை உருவாக்கி, வடக்கு மாகாணத்திற்கென ஒதுக்கப்பட்ட இந்த அபிவிருத்தித் திட்டத்தை வேறு எங்காவது கொண்டுசெல்ல சிலர் முயற்சிப்பதாகவும் அவர் தனது அறிக்கையில் குற்றம் சுமத்தியுள்ளார்.