பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையில்! - ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றிகள்
வட மாகாணத்துக்கான பொருளாதார மத்திய நிலைய அமைவிடம் தொடர்பில் ஏற்பட்டு வந்த இழுபறிக்கு ஒரு முடிவை எட்டுவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் தனது நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் முதலமைச்சரின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில்,வடமாகாணத்துக்கென முன்மொழியப்பட்டு வவுனியாவில் அமைக்கப்படவிருந்த பொருளாதார மத்திய வலயம் எவ்விடத்தில் அமைக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் சில காலமாக சரச்சைக்குரியதாகவிருந்ததை சகலருமறிவீர்கள்.
பல விவசாய அமைப்புக்கள், துறைசார் நிபுணர்கள், கல்விமான்கள், பொது அமைப்புக்கள் போன்றவை இந் நிலையம் ஒமந்தையில் அமைய வேண்டுமென்றே கோரினார்கள்.இன்னும் சிலர் தாண்டிக்குளத்தில் விவசாய பண்ணையில் அமைய வேண்டுமென அடம் பிடித்தார்கள்.
இதனால் இவ்வமைவிடம் எங்கு அமைய வேண்டுமென்பதை தீர்மானிப்பதற்காக 03.07.2016ம் திகதி தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமாகிய கௌரவ இரா.சம்பந்தன் தலைமையில் கொழும்பில் இடம்பெற்ற கூட்டத்தில் வடமாகாண சபையின் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் எடுக்க முடியாத காரணத்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வடமாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மத்தியில் கருத்துக் கணிப்பொன்றை நடாத்தி தீர்மானம் எடுக்குமாறு முதலமைச்சர் அவர்களை இரா.சம்பந்தன் கேட்டுக் கொண்டார்.
இவ் வழிகாட்டலின் அடிப்படையில் 30 மாகாணசபை உறுப்பினர்கள், 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் வாக்கெடுப்பு ஒன்று நடாத்தப்பட்டு நேற்று 11.07.2016ம் திகதி நண்பகல் 12.00 மணி வரை வாக்குச்சீட்டுக்கள் பெறப்பட்டன.
இவ்வாக்குச்சீட்டுக்களின் முடிவுகளின் படி 30 மாகாண சபை உறுப்பினர்களில் 21 பேர் வாக்களித்துள்ளனர். அவர்களில் 18 பேர் ஓமந்தைக்கும் 03 பேர் தாண்டிக்குளத்திற்கும் வாக்களித்துள்ளனர்.
09 மாகாண சபை உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. அதே போல் பாராளுமன்ற உறுப்பினர்கள் 10 பேரில் 05 பேர் வாக்களித்துள்ளனர். அதில் 03 பேர் ஓமந்தைக்கும் 02 பேர் தாண்டிக்குளத்துக்குமாக வாக்களித்துள்ளனர். ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கவில்லை.
இதனடிப்படையில் ஓமந்தைக்கு சார்பாக 21 வாக்குகளும் தாண்டிக்குளத்திற்கு சார்பாக 05 வாக்குகளும் கிடைக்கப் பெற்றுள்ளன. இவ் வாக்குச் சீட்டுக்கள் பதிவுத்தபால் மூலமும், மின்னஞ்சல் மூலமும், தொலைநகல் மூலமும் அனுப்பப்பட்டன.
இவ் வாக்கெடுப்பின் மூலம் ஆரம்பத்திலிருந்தே பலரும் விருப்பம் தெரிவித்த படி ஓமந்தை தான் பொருத்தமான அமைவிடம் என்பது உறுதியாகியுள்ளது. இத்தகைய ஒரு தீர்மானத்தை எடுப்பதற்கு வாக்களித்த பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோருக்கு முதலமைச்சர் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறார்.
அத்துடன் இத்தகைய ஒரு தீர்மானத்திற்கு தூண்டு கோலாக தமது கருத்துக்களை அச்சமின்றியும் எந்த விதமான எதிர்பார்ப்புக்களின்றியும் வெளியிட்ட பொதுமக்கள், துறைசார் நிபுணர்கள், கல்விமான்கள், விவசாய அமைப்புக்கள், அரசியல் பிரமுகர்கள், பொது நிறுவனங்கள் ஆகியவற்றிற்கும் முதலமைச்சர் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறார்.
குறிப்பாக மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சி.தவராசா அவர்களுக்கும், கௌரவ உறுப்பினர் வை.தவநாதன் அவர்களுக்கும் தங்களுடைய ஆதரவை பத்திரிகைகள் மூலம் வெளியிட்டமைக்கு முதலமைச்சர் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறார்.
இது சம்பந்தமான செய்திகளை வெளியிட்டும், நிபுணர்களின் கட்டுரைகளை வெளியிட்டும், கேலி சித்திரங்கள் மூலம் கருத்துக்களைத் தெரிவித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு தெளிவை ஏற்படுத்திய சகல பத்திரிகைகள், இணையத்தளங்கள், சகல ஊடகங்களுக்கும் முதலமைச்சர் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறார்.