ஒட்டுமொத்த குடும்பத்தையும் சிறை வைத்தாலும் அரசியல் பயணத்தை தடுக்க முடியாது
ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் சிறையில் அடைத்தாலும் மக்களுக்கான எனது அரசியல் பயணத்தை எவராலும் தடுக்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சூளுரைத்துள்ளார்.
நாமல் ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டு, ஒரு சில நிமிடங்களில் தனது முகப் புத்தகக் கணக்கில் ஏற்றிய பதிவொன்றிலேயே மஹிந்த ராஜபக்ச இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நிதி மோசடிக் குற்றச்சாட்டில் இன்றைய தினம் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
தன் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தி தனது பிள்ளைகளை சிறை வைப்பதன் ஊடாக எனது அரசியல் பயணத்தை தடுத்து நிறுத்தி விடலாம் என இவர்கள் நினைத்தால் அது வெறும் கானல் நீராகவே இருக்கும் என்றும் மஹிந்த தனது முகப்புத்தக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இன்றைய தினம் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்னர், சிறைச்சாலை வாகனத்தில் ஏற்றிச் செல்லும் வரையான சம்பவங்களை முகப் புத்தகத்தின் ஊடாக நேரடியாக நாமல் ராஜபக்ச தரப்பு ஒளிபரப்பு செய்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.