Breaking News

மகிந்த தேவையில்லை - சந்திரிக்கா



கீழ் மட்டத்தில் வாக்கு வங்கியும் வரவேற்பும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கே இருப்பதாகவும் மகிந்த ராஜபக்சவுக்கு அப்படியான கீழ் மட்ட வாக்கு வங்கி எதுவும் இல்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை மன்றக்கல்லூரியில் இரண்டு நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களை தெரிவு செய்யும் நிகழ்வில் பேசும் போதே சந்திரிக்கா இதனை கூறியுள்ளார்.

இணைந்து செல்லாவிட்டால் வெற்றி பெற முடியாது எனவும் கிராமங்களில் உள்ளவர்கள் மகிந்த ராஜபக்சவையே இன்னும் விரும்புவதாகவும் அமைச்சர் ஜோன் செனவிரட்ன கூறியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மகிந்த ராஜபக்ச இனி எந்த வகையிலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு தேவையில்லை எனவும் சந்திரிக்கா கூறியுள்ளார்.

அதேவேளை, இங்கு உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசாங்கத்தை கவிழ்க்க போவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறியுள்ளமைக்கு தான் பதிலளிக்க உள்ளதாகவும் மகிந்த ராஜபக்ச எந்த காலத்திலும் அரசாங்கங்களை கவிழ்த்தவர் அல்ல எனவும் கூறியுள்ளார்.

மேலும் மகிந்த ராஜபக்ச தனக்கு மேற்கொண்ட அநீதிகள் குறித்து ஜனாதிபதி விரிவாக விபரித்துள்ளார்.

அதேவேளை, இங்கு கேள்வி ஒன்றை எழுப்பியுள்ள தொகுதி அமைப்பாளர் ஒருவர், நாமல் ராஜபக்ச விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் ஏன் அவருக்கு தண்டனை வழங்கவில்லை எனவும் கேட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள ஜனாதிபதி, நீதிமன்ற விவகாரங்களில் தன்னால் தலையிட முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.