Breaking News

 பயங்கரவாதத் தடுப்புச் சட்ட விவகாரம்: நீக்குதல் குறித்து இருதரப்பும் ஆராய்வு

காணிகளை விடுவித்தல், வடக்கு-கிழக்கில் இயல்பு வாழ்வு திரும்புதல், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குதல், தடுப்பில் உள்ளோரை விடுவித்தல் அல்லது அவர்களால் மீது வழக்கு தொடர்தல், உண்மையறிதல், நல்லிணக்கம், நீதி வழங்கல், பிராயசித்தம் செய்தல் என்பவை தொடர்பில் உண்டான முன்னோற்றம் தொடர்பாக இலங்கையும் ஐரோப்பிய ஒன்றியமும், ஆராய்ந்துள்ளன. 

ஐ.நா மனித உரிமைகள் மன்றத்தின் 2015 ஒக்டோபர் 01 ஆம் திகதிய தீர்மானத்தின் அமுலாக்கம் என்ன நிலையில் உள்ளது என்பதையிட்டு கருத்து பரிமாறும் வாய்ப்பு இந்தக் கூட்டத்தில் கிடைத்ததாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது. ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களையும் அதற்கு அப்பால் எடுக்கவுள்ள நடவடிக்கைகளை பற்றியும் இங்கு தெரிவிக்கப்பட்டது. 

இந்த விடயங்கள், ஐரோப்பிய ஒன்றிய- இலங்கை கூட்டு ஆணைக்குழுவின் 20ஆவது கூட்டத்தில் புரஸெஸ்ஸில் பேசப்பட்டது. 1995 ஐரோப்பிய ஒன்றிய-இலங்கை ஒத்துழைப்பு உடன்படிக்கையை மேற்பார்வை செய்யும் இந்த ஆணைக்குழு, இருபக்க விடயங்கள் மற்றும் பரஸ்பர நலன்கள் பற்றி கவனிப்பாகும். சீரான செயற்பாடு, ஒப்பந்தத்தை அமுல்படுத்தல், முன்னுரிமைகளை வகுத்தல், பரிந்துரை செய்தல் என்பன இதன் பொறுப்பு ஆகும். கூட்டு ஆணைக்குழுவின் நிபந்தனைக்கு அமைய நிறுவப்பட்ட மூன்று செயற்குழுக்களும் தமது செயற்பாடுகள் குறித்த அறிக்கையை சமர்ப்பித்தன. 

இந்த கூட்டம் மிகவும் ஆக்கபூர்வமானதாக அமைந்தது. ஐரோப்பிய ஒன்றியம் மே மாதம் இலங்கையில் நடந்த இயற்கை அனர்த்தங்களால் உண்டான துன்பங்களுக்கு அனுதாபம் தெரிவித்தது. ஐரோப்பிய ஒன்றியம், அனர்த்த நிவாரணமாக ஏழு இலட்சம் யூரோக்களை கொடுத்தது. இதை இலங்கை மிகவும் நன்றியுடன் நினைவு கூர்ந்தது. இலங்கையிலிருந்து மீன் ஏற்றுமதி தடை நீக்கம் பற்றி இருதரப்பினரும் மகிழ்;ச்சி தெரிவித்தனர். 

மீன்பிடித்துறை தொடர்பாக இரு தரப்பினரும் நெருங்கிய தொடர்புகளை பேணுவதாக ஊப்புக்கொண்டனர். ஜி.எஸ்.பி. சலுகை கேட்டு இலங்கை செய்த விண்ணப்பத்தை கூட்டு ஆணைக்குழு வரவேற்றது. இந்த விண்ணப்பத்தை மதிப்பீடு செய்யும் செயன்முறை பற்றி இருதரப்பும் கலந்துரையாடின. ஐரோப்பிய ஒன்றியம் - இலங்கை முதலீடு தொடர்பான கலந்துரையாடலை மீண்டும் தொடங்க கூட்டு ஆணைக்குழு சம்மதம் தெரிவித்தது. அகன்ற கொழும்பு கழிவு நீர்த் திட்டத்துக்காக 50 மில்லியன் யூரோக்களை சலுகைக் கடன் வழங்க, இலங்கை அரசாங்கத்துடன் ஐரோப்பிய ஒன்றிய முதலீட்டு வங்கி பேச்சுவார்த்தை நடத்திவருவதாக கூறியுள்ளது. 

ஐரோப்பிய ஒன்றிய உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி ஒத்துழைப்பு நிகழ்ச்;சித் திட்டத்தில் இலங்கை மாணவர்கள் கல்விமான்கள், பல்கலைக்கழகங்களின் பங்கு பற்றுதலை ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்றது. நிறைய வாய்ப்புகள் உள்ளதால் இலங்கையிலிருந்து கூடுதல் விண்ணப்பங்கள் கிடைப்பதை ஐரோப்பிய ஒன்றியம் ஊக்குவித்துள்ளது. அடுத்த கூட்டு ஆணைக்குழு கூட்டம் கொழும்பில் 2017இல் நடைபெற முன்னர் எடுக்க வேண்டிய பின்னூட்டல் நடவடிக்கைகள் தொடர்பிலும் உடன்பாடு காணப்பட்டது.