மீண்டும் தொகுதிவாரித் தேர்தல் முறை - ஜனாதிபதி
எதிர்வரும் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலை தொகுதிவாரித் தேர்தல் முறைமையின் கீழ் நடாத்தத் திட்டமிட்டுள்ளதாக ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களை நேற்றைய தினம் இரவு ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடிய போதே ஸ்ரீலங்கா ஜனாதிபதி இந்தத் தகவலைத் கூறியிருக்கின்றார்.
ஸ்ரீலங்காவில் தற்போது நடைமுறையிலுள்ள விகிதாசார தேர்தல் முறைமைய மாற்றி புதிய தேர்தல் முறைமையை அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவரும் நிலையிலேயே 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடாத்தத் திட்டமிட்டுள்ள உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலை தொகுதி வாரி தேர்தல் முறைமையின் கீழ் நடாத்தவுள்ளதாக ஸ்ரீலங்கா ஜனாதிபதி அறிவித்திருக்கின்றார்.
1978 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவினால் அறிமுகப்படுத்தப்பட்ட அரசியல் யாப்பிற்கமைய முன்னைய தொகுதி வாரித் தேர்தல் முறைமைக்குப் பதிலாக விகிதாசார தேர்தல் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது.
இதனால் கட்சி உறுப்பினர்களுக்கிடையில் ஏற்பட்ட போட்டி, முரண்பாடுகள் மற்றும் மோதல்களை அடுத்தே மீண்டும் தொகுதிவாரித் தேர்தல் முறைமையை அறிமுகப்படுத்துவது என்ற கருத்து கடந்த பல வருடங்களாக இருந்து வந்தன. எனினும் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி எட்டாம் திகதி ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் போது தேர்தல் முறைமை உட்பட தற்போதைய அரசியல் சாசனத்தை மறுசீரமைப்பதாக அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.
இந்த வருட இறுதிக்கும் புதிய அரசியல் சாசனத் தயாரிப்பு நடவடிக்கைகள் பூர்த்தியடைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கு முன்னதாகவே புதிய தேர்தல் முறைமைக்கு அமைய எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடாத்துவது என்று ஸ்ரீலங்கா ஜனாதிபதி அறிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
அதேவேளை நேற்றைய சந்திப்பின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள் வற் வரி அதிகரிப்புக்கும் தமது கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். வற் வரி அதிகரிப்பை உச்ச நீதிமன்றம் இடைநிறுத்தியுள்ள போதிலும், அதனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அங்கம் வகிக்கும் நல்லாட்சி அரசாங்கம் தொடர்பில் மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் ஜனாதிபதி மைத்ரிபாலவிடம் அவர்கள் எடுத்துரைத்துள்ளனர்.
இதன்போது வற் வரி அதிகரிப்பை தானும் விரும்பவில்லை என்று தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா ஜனாதிபதி, மக்கள் மீது மேலும் சுமைகளை சுமத்தும் வரி விதிப்புக்களை தவிர்க்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.