யுத்தகுற்ற விசாரணை பொறிமுறையை ஆராய விசேட குழு
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணைக்காக ஏற்படுத்தப்படவுள்ள உத்தேச நீதி விசாரணை பொறிமுறை குறித்து ஆராய, சட்டத்தரணிகள் மட்டத்திலான விசேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது.
ஐவரை கொண்டதாக அடுத்த வாரமளவில் குறித்த குழு நியமிக்கப்படவுள்ளதாக, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், ஏற்படுத்தப்படவுள்ள உத்தேச நீதி விசாரணை பொறிமுறையானது, இலங்கையின் அரசியலமைப்புக்கு ஏற்புடையதாகவே அமையவேண்டுமென்பதே இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிலைப்பாடென, அச் சங்கத்தின் உபதலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் குறித்த குழுவினரின் முன்மொழிவுகளை, மனோரி முத்தெட்டுவேகம தலைமையிலான நல்லிணக்க பொறிமுறை செயலணிக்கு சமர்ப்பிக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அரசியலமைப்புக்கு உட்பட்டதாகவே விசாரணை பொறிமுறை அமைக்கப்படவேண்டுமென்பதில், அரசாங்கம் உறுதியாக இருக்கும் நிலையில், இலங்கை அரசியலமைப்பில் சர்வதேச நீதிபதிகளை உள்ளீர்ப்பதற்கான ஏற்பாடுகள் இல்லை. அவ்வாறான திருத்தங்களை மேற்கொள்வதற்கும் தயாரில்லையென, அண்மையில் ஜனாதிபதி மைத்திரி பகிரங்கமாகவே அறிவித்திருந்தார்.
சர்வதேச விசாரணைக்கு அழுத்தம் கொடுத்து வந்த அமெரிக்காவும்கூட, விசாரணை பொறிமுறை குறித்து இலங்கையே தீர்மானிக்க வேண்டுமென தற்போது கூறியுள்ளது.
இவ்வாறான நிலையில், சர்வதேசத்தின் தலையீடற்ற ஒரு விசாரணை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த வகையில் தீர்வினை பெற்றுத்தரும் என்பது அவர்கள் சார்பில் போராடி வரும் தமிழ்த் தலைமைகளின் கேள்வியாக உள்ளது.