கைதுசெய்யப்பட்டவர் எங்கே? : மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு
யாழில், சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட குடும்பஸ்தர் ஒருவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தாமை குறித்து, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ் தெரிவித்தார்.
யாழ்.குருநகர் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஆட்டோ சாரதி ஒருவரை, கடந்த 5ஆம் திகதி யாழ்.பொலிஸார் கைதுசெய்துள்ளதோடு, அவரை இதுவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவில்லை.
இந்நிலையில், குறித்த நபரைப் பற்றிய எவ்வித தகவல்களும் கிடைக்கப்பெறவில்லையென, அவரது மனைவி மற்றும் பெற்றோர்களால் இந்த முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாட்டின் பிரகாரம், கைதுசெய்யப்பட்ட நபர் பற்றிய தகவல்களை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு தெரியப்படுத்துமாறு யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ் அதிபருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, உறவினர்களின் முறைப்பாட்டிற்கிணங்க, மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் மேலும் தெரிவித்தார்.