யாழ். பல்கலை தாக்குதல் ஒரு புனை கதையாகும்: விக்கிரமபாகு
யாழ். பல்கலைக்கழக தாக்குதல் குறித்து ஆராய்வதற்காக சிறப்பு பிரதிநிதிகள் குழுவொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் வெகு விரைவில் இவ்விடயம் குறித்து ஆராய்ந்து பொதுமக்களை தெளிவுபடுத்த வேண்டும் என நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், யாழ். பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களால் சிங்கள மாணவர்கள் தாக்கப்பட்டதாக கதைகள் புனையப்பட்டுள்ளன. இது திரிபுபடுத்தப்பட்ட ஒரு கதையாகும். இந்த கதையை புனைவதற்கு மிகவும் கடினமாக உழைத்திருப்பார்கள் போலும். எனினும் இது நம்பக்கூடியதாக இல்லை.
தங்கள் தாயகத்திற்கு கல்வி நடவடிக்கைக்காக வந்த சகோதர மொழி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தி தாயகத்தின் கௌரவத்தை கெடுக்கும் வகையில் யாழ். தமிழ் மாணவர்கள் செயற்பட்டிருப்பார்கள் என்பது நம்பக்கூடியதாக இல்லை. இது மாணவர்களை தூண்டிவிட்டு மேற்கொள்ளப்பட்ட சதிச் செயலாகும்.
எனவே இது குறித்த விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அண்மையில் சாலாவ இராணுவ ஆயுத களஞ்சியசாலையில் திடீரென வெடிப்பு ஏற்பட்டது. ஆனால் அது தொடர்பில் இதுவரை விசாரணை செய்து அறிக்கையிடப்படவில்லை. இந்நிலையில், இடம்பெற்றுள்ள யாழ். பல்கலைக்கழக தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கு சிரேஷ்ட அதிகாரிகள் அடங்கிய குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது தொடர்பில் விரைவில் ஆராய்ந்து அறிக்கையிட்டு மக்களை தெளிவுபடுத்த வேண்டும்.
மக்களை குழப்பும் வகையிலான இவ்வாறான செயற்பாடுகள் பெரும் ஆபத்தை விளைவிக்கும். எனவே அதற்கு இடமளிக்கக் கூடாது. சில சிங்கள மாணவர்களும் யாழ். பல்கலைகழகத்திற்கு செல்ல விரும்புவதில்லை. அவர்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கு காரணம் தேடி வருகின்றனர். அதுவும் இதன் பின்புலத்திலுள்ள ஒரு காரணியாகும். எனவே இவ்விடயம் குறித்த விசாரணையை தாமதப்படுத்தக் கூடாது.
அதுமட்டுமின்றி, இதனை மேலும் தீவிரப்படுத்தும் முயற்சியாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச போன்றோர் கூவிக்கொண்டிருக்கின்றனர். சிங்கள மாணவர்களை தாக்கிய தமிழ் மாணவர்கள் சுதந்திரமாக அழைந்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களை கைது செய்ய எவரும் நடவடிக்கை எடுக்கவில்லை என விமல் கூறி வருகின்றார். எனவே இவ்வாறானவர்களின் வாயை அடைக்க விசாரணைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.