Breaking News

மைத்திரி - ரணிலுக்கு இடையில் மோதல் தீவிரம்!



மத்திய வங்கி ஆளுநராக செயற்பட்ட அர்ஜுன மகேந்திரனின் பதவி காலம் நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்துள்ளது.

எனினும் அவரது பதவி காலத்தை நீடிப்பதற்கு அல்லது வேறு ஒருவரை நியமிப்பதற்கு மேலும் தாமதமாகும் என ஜனாதிபதி செயலக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அர்ஜுன் மகேந்திரனை தொடர்ந்து மத்திய வங்கி ஆளுநர் பதவியில் தக்க வைத்து கொள்வதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் மேற்கொள்ளும் முயற்சியே இதற்கான காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை மத்திய வங்கி ஆளுநர் பதவிக்கு அரசாங்க அதிகாரி ஒருவரை நியமிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.

இந்நிலையில் அர்ஜுன மகேந்திரனை தொடர்ந்து அந்த பதவியில் நீடிப்பதற்கு பிரதமர் தீர்மானித்துள்ளார்.இவ்வாறான மாறுபட்ட கருத்தின் காரணமாக ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அர்ஜுன் மகேந்திரனை நியமிக்கவில்லை என்றால் சரித ரத்வத்தவை நியமிக்குமாறு பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்போதைய மத்திய வங்கி ஆளுநரின் பதவிக் காலம் நிறைவடைந்துள்ள நிலையில் நேற்று ஜனாதிபதி மற்றும் பிரதமர் கோட்டையில் உள்ள மத்திய வங்கியில் விசேட கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளனர்.

அதன் பின்னர் வெளிநாட்டு விஜயம் மேற்கொண்டுள்ள நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் அமைச்சர் மலிக் சமரவிக்ரமவுக்கு இந்த சந்திப்பின் போது தொலைபேசி மூலம் கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளனர்.

எப்படியிருப்பினும் கோப் குழு தகவல் வட்டாரங்களுக்கமைய மத்திய வங்கி கொடுக்கல் வாங்கல்களில் சில முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகவும் நேற்று கோப் குழுவிடம் சமர்ப்பித்த அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.