போர் சுற்றுலா தேசம் (story map)
இம்மையங்களில் நடப்பதென்ன? வரலாற்றுப் போதிப்புத்தான் நடக்கிறது. தெற்கிலிருந்து படையெடுத்து வரும் பெரும்பான்மையின மக்களுக்கு, புலிகளை – தமிழர்களை இராணுவம் வெற்றிகொண்ட கதைகள் வாய்மொழி வரலாறாக, சுவை சொட்ட எடுத்துச் சொல்லப்படுகின்றது. வயது – பால் – வர்க்கம் கடந்த நிலையில் சமதளத்தில் நின்று இந்த வரலாற்றைத் தெரிந்துகொள்கின்றனர். இவ்விடம் வரும் விவரமறியா பெரும்பான்மையின குழந்தைக்கும் தமிழர்களை தாம் அடிமைகொண்ட கதை போதிக்கப்படுகின்றது.
ஒருவகையில் பெரும்பான்மையினரின் நவீன வரலாற்றுக் கதைசொல்லிகளாக இராணுவச் சிப்பாய்கள் வலம்வருகின்றனர். எனவே இராணுவ மேலான்மையில் நின்றபடி போதிக்கப்படும் இலங்கையின் நவீன காலத்து வரலாறும், தமிழர்களை இரண்டாந்தரக் குடிமக்களாகவே கையாளுகின்றது. “அவர்களைக் கொல்வது பாவமில்லை” என மகாவம்சம் போதித்ததை, “அவர்களைக் கொன்றது பாவமில்லை” என இக்கட்டுரையில் வரும் போர் வெற்றி நினைவுச் சின்னங்கள் குறீயீடாய் உணர்த்துகின்றன.
இவ்வாறு போதிக்கப்படும் தமிழர்களை அடிமைகொண்ட வரலாறு, இலங்கையில் நல்லிணக்கத்தை இனங்கள் மத்தியில் உண்டாக்குமா என்கிற கேள்வி ஒரு புறமிருக்க, இங்கு அமைக்கப்பட்டிருக்கும், போர் வெற்றி நினைவுச் சின்னங்களைத் தமிழர்கள் அவமான உணர்வோடும், அடிமைப்பட்ட வலியோடும்தான் நோக்குகின்றனர். ஆனால் பெரும்பான்மையினருக்கோ, வெற்றிக் களிப்புக்குரிய இடமாக அது இருக்கின்றது.
மிக நுண்ணிய வகையில், அதேநேரத்தில் பலரும் பார்த்திருக்கும்படியான பிரம்மாண்டமான வடிவில் போதிக்கப்படும் வரலாறு இனச்சிக்கலை மேலும் கூர்மைப்படுத்தும் என்பதை ஆள்பவர்கள் உணரல் வேண்டும். போரில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நினைவுச் சின்னத்தைத் தானும் அமைக்க தமிழர்களுக்கு அனுமதியில்லை. ஆனால் அவர்களை வெற்றிகொண்ட நினைவுச் சின்னங்களை நிலமெங்கும் அமைத்துக்கொள்ள வழங்கப்பட்டுள்ள அதிகாரமானது, இனங்கள் மத்தியில் மேலும்மேலும் பிளவுகளை ஆழப்படுத்தும்.
தோற்றவர் முன்னிலையில் வெற்றியைக் கொண்டாடுதல் போன்றதொரு பழிவாங்கல் நிகழ்வு எல்லா வடுக்களையும் விட ஆழமானது. இந்த மாதிரியான வடுக்கள்தான் இலங்கை வாழ் இனங்கள் மத்தியில் நல்லிணக்கத்தை சாத்தியமற்றதாக்குகின்றது. வெற்றி தரும் மேலான்மைத்தனம், அதிகாரத்தை மேலிருந்து கீழ் நோக்கி பரவலாக்கம் செய்வது சரியெனில், நல்லிணக்க எண்ணங்களையும் மேலிருந்து கீழ் நோக்கி பகிர்ந்துகொள்ளுவதுதான் நியாயம்.
வன்னிக்குள் அமைக்கப்பட்டுள்ள போர் வெற்றி நினைவுச்சின்னங்கள் பற்றியும், அங்கு என்னவெல்லாம் வரலாற்றைப் போதிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை அறியவும் இந்த இணைப்பை க்ளிக் செய்யுங்கள்.