‘இலங்கையின் குத்துக்கரணம்’ – பிரபல இந்திய ஊடகவியலாளரின் பார்வை
சிறிலங்காவின் தற்போதைய ஆட்சியாளர்களுடன் நல்லுறவைப் பேணிவரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்தும் சிறிலங்காவின் போர்க்குற்ற விசாரணை தொடர்பாக அமைதி காத்து வருகிறார். இவர் இந்த விடயம் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பதைத் தெளிவாக வரையறுக்க வேண்டும்.
இவ்வாறு The Statesman இதழில், பிரபல ஊடகவியலாளர் சாம் ராஜப்பா எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்காவைப் பொறுத்தளவில் 2015 என்பது ஒரு அதிசயம் மிக்க ஆண்டாகும். அதாவது 2015 ஜனவரி மாதத்தில் சிறிலங்கா அரசாங்கத்தில் மாற்றம் ஏற்பட்டது. சிங்களப் பெரும்பான்மை சமூகத்தினர் வாழ்ந்து வரும் 16 மாவட்டங்களில் மகிந்த ராஜபக்ச பெரும்பான்மை வாக்குகளைப் பெற்ற போதிலும் மைத்திரிபால சிறிசேன ஒட்டுமொத்தமாக அதிக வாக்குகளைப் பெற்று நாட்டின் அதிபராகத் தேர்வாகினார்.
தமிழ் மக்கள் வாழும் வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் மற்றும் கிழக்கு மாகாணம், நுவரெலியா மாவட்டம் ஆகியவற்றில் சிறிசேனவுக்கு ஆதரவான வாக்குகள் அளிக்கப்பட்டன.
இது மட்டுமல்லாது இரண்டாவது அதிசயமும் இடம்பெற்றது. அதாவது கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான பொதுத் தேர்தல் இடம்பெற்ற போது நாட்டின் முக்கிய இரண்டு கட்சிகளான சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய இரண்டும் ஒரு குடையின் கீழ் ஆட்சியமைத்தன. அதாவது சிறிலங்காவின் அதிபர் சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவராகவும் பிரதமர் ஐ.தே.கட்சியைச் சேர்ந்தவராவார். இவர்கள் இருவரும் ஒற்றுமையாக நாட்டை ஆட்சிசெய்கின்றனர். சிறிலங்காவின் அரசாங்கத்தில் ஏற்பட்ட இத்தகைய மாற்றமானது போரால் பாதிக்கப்பட்ட நாட்டில் மீளிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான பாரியதொரு நகர்வாகும்.
மூன்றாவது அதிசயமும் இடம்பெற்றது. அதாவது செப்ரெம்பர் 2015ல் இடம்பெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 31வது கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு சிறிலங்காவும் இணைஅனுசரணை வழங்கியது. இத்தீர்மானமானது மனித உரிமைகள் பேரவையுடன் இணைந்து சிறிலங்கா மேற்கொள்ள வேண்டிய சில உடன்பாடுகளை வலியுறுத்தியுள்ளது.
‘கடந்த காலத்தில் முறிந்து போன வாக்குறுதிகள், அனுபவங்கள் மற்றும் திடீர் மாற்றங்களைக் கொண்டு எமது நிலைப்பாட்டைத் தீர்மானிக்க வேண்டாம். எம்மை நம்புங்கள். எம்முடன் இணைந்து பணியாற்றுங்கள். இதன்மூலம் புதியதோர் சிறிலங்காவைக் கட்டியெழுப்ப முடியும்’ என சிறிலங்காவின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றும் போது தெரிவித்தார்.
சிறிலங்காவின் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பொதுமக்களுக்கு எதிராக சிறிலங்கா இராணுவத்தினர் கண்மூடித்தனமான படுகொலைகளை மேற்கொண்டனர் என மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளர் செய்ட் ராட் அல் ஹுசேனின் அறிக்கையை மேற்கோள்காட்டி பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறிலங்கா அரசாங்கத்தால் நீண்ட காலமாக பலவந்தக் கைதுகள் மற்றும் தடுத்து வைத்தல்கள் போன்றன இடம்பெற்றுள்ளதையும் அல் ஹுசேனின் அறிக்கை உறுதிப்படுத்துகிறது.
பலவந்தமாக காணாமற்போதல் சம்பவங்களுக்கும் சிறிலங்கா அரசாங்க அதிகாரிகளே காரணம் எனவும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சிறிலங்காவின் பாதுகாப்புப் படையினரால் மிகக் கொடூரமான முறையில் சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டமையும் இந்த அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய அறிக்கை மூலமே சிறிசேன மற்றும் விக்கிரமசிங்கவின் அரசாங்கமானது மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்திற்கு இணைஅனுசரணை வழங்குவதற்குக் காரணியாக அமைந்துள்ளது.
அமெரிக்காவால் முன்வைக்கப்பட்ட இத்தீர்மானமானது ஒக்ரோபர் 01, 2015 அன்று நிறைவேற்றப்பட்ட போது அதற்கு சிறிலங்கா இணை அனுசரணை வழங்கியது. இத்தீர்மானமானது சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தக் குற்ற விசாரணையானது கொமன்வெல்த் மற்றும் ஏனைய நாடுகளின் நீதிபதிகளை உள்ளடக்கி மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டு நீதிபதிகள், பாதுகாப்புச் சட்டவாளர்கள், விசாரணையாளர்களை உள்ளடக்கியே சிறிலங்காவில் யுத்தக் குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என இத்தீர்மானம் வலியுறுத்துகிறது.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை அகற்றுவதாகவும் சிறிலங்கா வாக்குறுதி வழங்கிய போதிலும் அதனை நிறைவேற்றவில்லை. கடந்த காலத்தில் முறிந்து போன வாக்குறுதிகளைக் கொண்டு தமது அரசாங்கத்தைத் தவறாக எடைபோடவேண்டாம் என ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமரவீர உரையாற்றி நான்கு மாதங்களின் பின்னர், சிறிலங்கா அரசாங்கமானது தனது வாக்குறுதிகளை நிறைவேற்றாது தனது கோட்பாட்டை தலைகீழாக மாற்றிக் கொண்டது.
சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க் குற்றங்கள் போன்றன தொடர்பில் விசாரணை செய்வதற்கு வெளிநாட்டு நீதிபதிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என சிறிசேனவும் விக்கிரமசிங்கவும் வெளிப்படையாக அறிவித்தனர். சிறிலங்கா இராணுவத்தை ‘யுத்தக் கதாநாயகர்கள்’ எனவும் சிறிசேன புகழ்ந்து உரைத்தார்.
சிறிலங்காவின் உள்நாட்டு நீதிப்பொறிமுறையில் அனைத்துலகப் பங்களிப்பு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என மே மாதத்தின் இறுதி வாரத்தில் இராணுவ அதிகாரிகளுடனான சந்திப்பொன்றில் விக்கிரமசிங்க உறுதியளித்திருந்தார். ‘சிறிலங்கா அரச அதிகாரிகள் மற்றும் நிறுவகங்களைக் குறைத்து மதிப்பிடக் கூடாது. இதனால் அனைத்துலக நீதிபதிகள், சட்டவாளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் விசாரணையாளர்களை உள்ளடக்கிய சிறப்பு நீதிமன்றம் ஒன்று உருவாக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானது.
பல பத்தாண்டுகளாக சிறிலங்காவில் நிலவி வரும் வன்முறைகள், சித்திரவதைகள், முறிந்து போன வாக்குறுதிகளின் விளைவாக, உள்நாட்டு நீதிப்பொறி முறையானது மக்கள் மத்தியில் நம்பிக்கையைத் தோற்றுவிக்காது’ என சிறிலங்கா தொடர்பாக மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளர் செய்ட் சுட்டிக்காட்டியிருந்தார்.
சிறிலங்காவின் அதிபர் மற்றும் பிரதமர் ஆகியோர் அரசியல் உறுதிப்பாட்டைக் கடைப்பிடிக்கவில்லை. இவர்கள் இருவரும் சிங்கள மக்கள் மத்தியில் தம்மீதான நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதையே நோக்காகக் கொண்டுள்ளனர். இவ்வாறு செய்வதன் மூலம் தமது நாட்டில் வாழும் பிறிதொரு சமூகத்தினருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறவேண்டிய தமது கடப்பாட்டிலிருந்து இவர்கள் தவறியுள்ளனர்.
சிறிலங்காவின் மனித உரிமைகள் விவகாரத்தைப் பலப்படுத்துவதற்குத் தொடர்ந்தும் அமெரிக்கா உந்துதல் வழங்க வேண்டும் என யூன் 27 அன்று, அமெரிக்க நாடாளுமன்றத்தைச் சேர்ந்த 24 உறுப்பினர்கள் இணைந்து அமெரிக்காவின் இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியிடம் வலியுறுத்தியுள்ளனர்.
‘இலங்கைத் தீவில் வாழும் அனைத்து சமூகத்தவர்கள் மத்தியிலும் சமாதானம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சிறிசேன அரசாங்கத்தை வலியுறுத்துமாறு தங்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம். இதுதொடர்பில் அமெரிக்காவானது தொடர்ந்தும் சிறிலங்காவிற்கு தொழினுட்ப மற்றும் திறன் அபிவிருத்திக்கான உதவிகளை வழங்க வேண்டும். இதன் மூலம் சிறிலங்காவானது வெற்றிகரமாக 30/1 தீர்மானத்தை நிறைவேற்ற முடியும்.
இதேவேளையில், நிலையான நீதி மற்றும் குற்றங்களை முடிவுக்குக் கொண்டு வருதல், இராணுவ மற்றும் பாதுகாப்புத் துறை சீர்திருத்தம், சட்ட ஆட்சி, தமிழ் மக்களின் அவாக்களை நிறைவேற்றுதல் போன்றவற்றைக் கருத்திற் கொண்டு சிறிலங்காவிற்கு அமெரிக்கா மேலதிக நிதியை வழங்குதல், வர்த்தக மற்றும் இராணுவ உதவிகளை வழங்குதல் போன்றவற்றைத் தெளிவாக வரையறுக்க வேண்டும்’ என அமெரிக்க நாடாளுமன்றைச் சேர்ந்த 24 பேர் கொண்ட குழுவினரால் ஜோன் கெரிக்கு அனுப்பப்பட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் தற்போதைய ஆட்சியாளர்களுடன் நல்லுறவைப் பேணிவரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்தும் சிறிலங்காவின் போர்க்குற்ற விசாரணை தொடர்பாக அமைதி காத்து வருகிறார். இவர் இந்த விடயம் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பதைத் தெளிவாக வரையறுக்க வேண்டும். பேரவையின் தீர்மானத்தை நிறைவேற்றுவதில் சிறிலங்கா சந்திக்கும் அனைத்து சவால்களையும் வெல்வதற்கான ஒத்தாசையை இந்தியா வழங்க வேண்டும்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையால் உருவாக்கப்பட்ட கண்காணித்தல் மற்றும் பொறுப்புக் கூறலுக்கான வல்லுனர் குழுவானது சிறிலங்கா பேரவையின் தீர்மானத்தின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதில் காலத்தை இழுத்தடித்துச் செல்வதாக சுட்டிக்காட்டியுள்ளது. சிறிசேன மற்றும் விக்கிரமசிங்க ஆகியோர் தாம் தமது நாட்டிற்குள் அனைத்துலக நீதிபதிகள் உள்நுழைவதற்கு அனுமதிக்க மாட்டோம் எனக் கூறியதானது முற்றிலும் தவறானது என வல்லுனர் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் ஈழப்போர் நிறைவடைந்து விட்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு விட்டனர். ஆனால் தற்போதும் 150,000 இராணுவத்தினர் வடக்கு மாகாணத்தில் நிலைகொண்டுள்ளனர். பெருந்தொகை இராணுவத்தினர் வடக்கில் நிலைகொண்டுள்ளதானது பொதுமக்களின் சுதந்திரமான நடமாட்டத்திற்கு ஒரு அச்சுறுத்தலாக உள்ளது. சிறிலங்கா இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட 7080 ஏக்கர் நிலத்தில் 5340 ஏக்கர் நிலப்பரப்பு உரிமையாளர்களிடம் இன்னமும் கையளிக்கப்படவில்லை.
சிறிலங்கா இராணுவத்தினரால் வடக்கு மாகாணத்தில் 172 தனியார் வீடுகள், 16 பாடசாலைகள், 19 ஆலயங்கள் மற்றும் 12 பொது நிறுவனங்கள் தற்போதும் கையகப்படுத்தப்பட்டுள்ளன. எவ்வித குற்றங்களும் உறுதிப்படுத்தப்படாது வழக்கு விசாரணை எதுவுமின்றி 150 வரையான அரசியற் கைதிகள் சிறைகளில் வாடுகின்றனர். சிறிலங்கா அரசாங்கத்திற்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் ஒன்றில் சிறிலங்காவிற்குள் சுயாட்சியுடன் வாழ்வதற்கு வழிவகுக்க வேண்டும் என தமிழ் மக்கள் ஆணை வழங்கியுள்ளனர். இது மட்டுமே இதயசுத்தியுடன் கூடிய மீளிணக்கத்திற்கு வழிவகுக்கும்.
ஆனால் சிறிசேன மற்றும் விக்கிரமசிங்க ஆகியோர் சமஸ்டி ஆட்சி முறையை நிராகரித்துள்ளனர். சிறிலங்கா அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளின் அடிப்படையில் செயற்படுவதற்கான அழுத்தத்தை அனைத்துலக சமூகமானது வழங்காது விட்டால், சிறிலங்காவின் இனப்பிரச்சினை தொடர்ந்தும் நிலைத்திருக்கும்.