அல் ஹுசைனின் கருத்துக்கு அரசாங்கம் கவனம் செலுத்தவேண்டும்!
நாட்டின் மனித உரிமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் ஆணையாளர் தெரிவித்திருக்கும் கருத்தை ஏற்றுக்கொள்கின்றேன். அரசாங்கம் இதுதொடர்பில் உடனடி தீர்மானங்கள் எடுக்காமல் இருப்பதானது சர்வதேசத்தின் நம்பிக்கையை இழக்கநேரிடும் என நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்தார்.
நவ சமசமாஜ கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான விவாதத்தின்போது அதன் ஆணையாளர் செய்ட் அல் ஹுசைன், இலங்கை அரசாங்கம் நாட்டில் சில முன்னேற்றகரமான வேலைத்திட்டங்களை மேற்கொண்டாலும் சிறுபான்மை மக்கள் மத்தியிலும் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியிலும் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவில்லையென தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் ஆணையாளரின் இந்த குற்றச்சாட்டை நாங்களும் ஏற்றுக்கொள்கின்றோம். ஏனெனில் அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்து ஒருவருடம் கடந்தும் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கான தீர்வை இன்னும் பெற்றுக்கொடுக்கவில்லை. அத்துடன் ஊடகவியலாளர்களான லசந்த விக்ரமதுங்க, எக்னெலிகொட, சிவராம் போன்றவர்களின் கொலை தொடர்பில் விசாரணைகள் முடிவடைய வில்லை.
மேலும் வடக்கில் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் காணிப்பிரச்சினை இன்னும் முழுமையாக தீர்க்கப்படவில்லை. அவர்களின் காணிகளை விடுவிக்கும் நடவடிக்கைகள் மந்த கதியிலேயே இடம்பெறுகின்றன. பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் முகாம்களில் வாழ்கின்றனர். அவர்களின் மீள்குடியேற்றம் தொடர்ந்து தாமதமாகிக்கொண்டு செல்கின்றது.
மேலும் பயங்கரவாத தடைச்சட்டத்தை அரசாங்கம் மாற்றுவதாக தெரிவிக்கின்றது. ஆனால் அதை முற்றாக நீக்கவேண்டும் என்றே நாங்கள் தொடர்ந்து கூறிவருகின்றோம். அத்துடன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருப்பவர்களை அரசாங்கம் விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். இதன் மூலம் அரசாங்கம் சர்வதேசத்தின் நம்பிக்கையை பெற்றுக்கொள்ளலாம்.
அதேபோன்று இலங்கையின் இராணுவ பொறிமுறை மற்றும் நீதிமன்ற கட்டமைப்பில் இருக்கும் பிழையே மனித உரிமை மீறல்தொடர்பான பிரச்சினைக்கு காரணம். அதனால் சர்வதேச நீதிபதிகள் விசாரணைக்கு அழைக்கப்படவேண்டும் என ஐக்கிய நாடுகள் ஆணையாளர் தெரிவித்திருப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம்.
அத்துடன் அரசாங்கம் ஐக்கிய நாடுகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும். அப்போது தான் அவர்களுக்கு எங்கள் மீது நம்பிக்கை ஏற்படும். மாறாக மஹிந்த ராஜபக் ஷவின் பின்னால் இருப்பவர்களின் கோரிக்கைகளுக்கு அடிபணிந்து அஞ்சி நடந்தோமென்றால் சர்வதேச ரீதியில் எங்களுக்கு பாரிய பிரச்சினைகள் ஏற்படலாம்.
எனவே அரசாங்கம் ஐக்கிய நாடுகள்மனித உரிமை பேரவைக்கு வாக்குறுதி அளித்த விடயங்களை அப்படியே நிறைவேற்றுவதன் மூலமே சர்வதேசத்தின் உதவியை தொடர்ந்து பெற்றுக்கொள் ளலாம். அத்துடன் தமிழ் மக்களின் பிரச்சி னைகளை தீர்த்துவைப்பதற்கு துரித நட வடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.