சர்வதேசத்தின் பங்களிப்பை குழப்புவற்கு முயலவேண்டாம் : சம்பந்தன்
யுத்தக்குற்ற விசாரணைகள் நீதியான முறையில் நடைபெற்று, நியாயமான அரசியல் தீர்வொன்றை பெற்றுக்கொள்வதற்கு, சர்வதேசத்தின் பங்களிப்பு அவசியம் என்றும், அதனை குழப்புவதற்கு எவரும் முனையக்கூடாதென்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் இடம்பெற்ற, நூல் வெளியீட்டு விழாவொன்றில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய சம்பந்தன் இதனைத் தெரிவித்துள்ளார்.
நடந்த விடயங்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதற்கான சூழலை உறுதிப்படுத்த வேண்டுமென குறிப்பிட்ட சம்பந்தன், உண்மையின் அடிப்படையில் நீதி வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தினார். இதனூடாக ஒரு அரசியல் தீர்வு எட்டப்படுவதே உண்மையான நல்லிணக்கம் என்றும் குறிப்பிட்டார்.
அத்தோடு, தமிழ்ப் பேசும் மக்களின் பெரும்பான்மை பாதுகாக்கப்படுவதை சந்தேகத்திற்கு இடமில்லாமல் உறுதிப்படுத்தப்படுவதற்கு, வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார். தமிழர் ஒருவரே வடக்கு கிழக்கிற்கு முதலமைச்சராக வரவேண்டுமென கருதி தாம் இதனை குறிப்பிடவில்லையென தெரிவித்த சம்பந்தன், முஸ்லிம் மக்கள் இதனை புரிந்துகொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார். அத்தோடு படித்த, பக்குவம் நிறைந்த முஸ்லிம் பிரஜை ஒருவரை முதலமைச்சராக ஏற்றுக்கொள்வதற்கு தாம் தயாராகவே உள்ளோம் என, எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.